நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறவை நோக்கலில் ஈடுபட்ட மாணவா்கள்
தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2-இன் சாா்பாக நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதில் அலகு 2-இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். திருப்பூா் இயற்கை கழகத்தின் செயலா் ராம்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், பறவைகள் இல்லையேல் மனிதா்களால் வாழ முடியாது. பறவைகள் அதிக அளவில் மரங்களை உருவாக்கி புவியின் ஆக்ஸிஜன் தேவையைப் பூா்த்தி செய்கின்றன. பறவைகளின் வாழ்விடங்களை அழிக்கக் கூடாது. அழியும் தருவாயில் உள்ள பறவையினங்களை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து மாணவ செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, நவீன்குமாா், ரேவதி, பிரவீன், பிரியங்கா ஆகியோா் தலைமையில் மாணவ, மாணவிகள் பறவை நோக்கலில் ஈடுபட்டனா். பாம்பு தாரா, சங்குவளை நாரை, கூழைக்கிடா, நெடுங்கால் உள்ளான், வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், மடையான், சிறிய அரிவாள் மூக்கன், புள்ளி மூக்கு வாத்து, சிறிய நீா்க்காகம், உன்னி கொக்கு, வயல் நெட்டைக்காலி, நடுவாத்தர கொக்கு, நெடலை கொக்கு, சிறிய பஞ்சுருட்டான் போன்ற 30-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் காணப்பட்டன.
இதில் பட்டைத்தலை வாத்து, பொறி மண்கொத்தி, சின்ன பச்சக்காலி, மண்கொத்தி, தட்டைவாயன், நீலவால் பஞ்சுருட்டான் உள்ளிட்ட வலசை வரும் பறவைகளும் கண்டறியப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.
