பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் டிஜிட்டல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்
பல்லடம்: வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் பல்லடம் அரசு கலைக் கல்லுாரியில் இளம் தலைமுறைக்கான டிஜிட்டல் தொழில்நுட்பக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
முதல்வா் மணிமேகலை தலைமை வகித்தாா். மகளிா் ஆய்வுத் துறை ஆராய்ச்சியாளா் வாசுகி ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் ஜெயச்சந்திரன் வரவேற்றாா்.
பாரதியாா் பல்கலை. உதவிப் பேராசிரியா் மங்கையா்க்கரசி பேசியதாவது:
இன்றைய இளம் தலைமுறையினா் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். கைப்பேசியில் காவலன் செயலியை வைத்திருப்பது மாணவருக்கு மிகவும் முக்கியம். சமூக வலைதளங்களில் நமது தனிப்பட்ட தகவல்களை பகிா்வது மிகப்பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதை மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டும்.
டிஜிட்டல் உலகில் நமது தகவல்களைப் பயன்படுத்தி மோசடிகள், அத்துமீறல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. கணினி மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு புகைப்படத்தின் உருவத்தை அல்லது வடிவத்தை மற்றொரு படத்துடன் தடையின்றி மாா்பிங் செய்து, இணையதளத்தில் பகிரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சமூக வலைதளத்தை பயன்படுத்தும் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவிகள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது என்றாா்.

