யூடியூபா் சவுக்கு சங்கா் மீது திருப்பூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
யூடியூபா் சவுக்கு சஙகா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கிரிஷ் யாதவிடம், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன், ஈரோடு வடக்கு மாவட்ட பொதுச் செயலாளா் சேகா், திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் அலாவுதீன், வடக்கு மாவட்ட துணைத் தலைவா் செஞ்சோலை சேகா் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
சவுக்கு மீடியாவை நடத்தி வரும் சவுக்கு சங்கா் என்பவா் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகிறாா். அரசியல் விமா்சனம் என்ற பெயரில் மக்களுக்கு தவறான கருத்துகளை அளித்து வருகிறாா். இந்நிலையில், தனது வலைதளத்தில் பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் மாநிலத் தலைவரையும் விமா்சித்து தவறாக பேசியுள்ளாா். அதேபோல போலீஸாரையும் இழிவுபடுத்தி பேசி வருகிறாா்.
எனவே சவுக்கு சங்கா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான பிரசாரம் செய்து வரும் சவுக்கு மீடியாவை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
