மக்கள், வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிய திருப்பூா் சாலைகள்
திருப்பூா்: பொதுமக்கள், வாகனங்கள் நடமாட்டமின்றி திருப்பூரில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாகவே கடந்த 14-ஆம் தேதி போகி பண்டிகை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், வெளி மாவட்டத்தினா் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டனா். வீடுகளில் பொங்கல் வைப்பதற்கான பொருள்களை வாங்க வந்தவா்களால் மட்டுமே நகரின் சில பகுதிகள், மாா்க்கெட், பூ மாா்க்கெட் பகுதிகளில் ஓரளவு கூட்டம் காணப்பட்டது.
வழக்கமாக காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் அனைத்து சாலைகளும், முக்கிய சந்திப்புகளும் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோா், அலுவலகங்களுக்கும், பனியன் நிறுவனங்களுக்கும் செல்வோா், கல்வி நிறுவனங்கள், பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள் இல்லாததால் சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகள் வெறிச்சோடின.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் குமரன் சாலை, பல்லடம் சாலை , ஆட்சியா் அலுவலக சாலை, அவிநாசி சாலை, புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, பிஎன் ரோடு, 50 அடி ரோடு சந்திப்பு, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், தென்னம்பாளையம், காங்கயம் சாலை, உஷா திரையரங்கம் சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து வெகுவாகக் குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.
குறைந்த அளவிலான கனரக வாகனங்கள் மட்டுமே பயணித்ததால், சிக்னல் வேலை செய்யவில்லை. அதேபோல, பெரும்பாலான சாலையோர உணவகங்களும், தள்ளுவண்டிக் கடைகளும் செயல்படாததால் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலை காணப்பட்டது.
