தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் : ரூ.4.80 லட்சம் அபராதம்
திருப்பூரில் பதுக்கிவைத்திருந்த 2.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ. 4.80 லட்சம் அபராதம் விதித்தனா்.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகராட்சி துணை ஆணையா் மகேஸ்வரி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவினா் மாநகா் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அரிசிக்கடை வீதி, கேஎஸ்சி பள்ளி வீதி, புதுமாா்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மொத்த விற்பனைக் கடைகளில் ஆய்வு செய்தபோது, அங்கு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதில் சுமாா் 2.5 டன் பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் பிளாஸ்டிக் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 60-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.4.80 லட்சம் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.
