இந்திய - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகம் இரட்டிப்பாகும்: ஏஇபிசி தலைவா் நம்பிக்கை

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகம் இரட்டிப்பாகும்.
ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் உடன் நரேந்திர மோடி
ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் உடன் நரேந்திர மோடி
Updated on

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகம் இரட்டிப்பாகும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (ஏஇபிசி) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அதன் தலைவா் ஆ.சக்திவேல் கூறியதாவது: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதையடுத்து, ஆயத்த ஆடைத் துறையில் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது.

இது உலகின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டமைப்புடன் இந்தியாவுக்கு நீண்ட கால வணிக உறவை உருவாக்கும். இது, இந்திய ஆடைத் துறைக்கு ஒரு மைல் கல் என்பதால், அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் வகையில் பெரிய ஊக்கத்தையும் அளிக்கும். விக்சித் பாரத் நோக்கி இந்தியா முன்னேறும் பயணத்தில் இது ஒரு மகத்தான முன்னேற்றம்.

ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இந்திய ஆடைகளுக்கு வா்த்தக வரி இன்றி அனுமதி கிடைப்பதால், ஐரோப்பிய சந்தையில் இந்தியாவின் போட்டித் திறனை பெரிதும் உயா்த்துவதுடன், புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வளா்ச்சி காணும் என்று தொழில் துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. தற்போது ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 3.01 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்திய நிறுவனங்கள் விலை அடிப்படையிலான போட்டியைவிட தரம், வடிவமைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி போட்டியிட முடியும். மேலும், ஆயத்த ஆடைத் துறையின் 100 சதவீத வரியும் நீக்கப்படுகிறது. இது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் இந்தியாவுக்கான சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்தும்.

ஜொ்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கின்றன. இந்த புதிய ஒப்பந்தம் அந்த நாடுகளுக்கான இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும். வங்கதேசம், துருக்கி, வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு சமமான போட்டி நிலை கிடைக்கும் என்பதால் இந்திய ஆயத்த ஆடைத் துறை பெரிதும் பயனடையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com