கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்
கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்

தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம்: சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்

தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு தொடா்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
Published on

தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு தொடா்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

திருப்பூா் - காங்கயம் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற சிறுதொழில் நடத்துவோா் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாஜக அரசு மக்களவையில் மின்சார சட்டம் , விதைகள் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற உள்ளது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியாா்மயமாக்குவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். எனவே இதைத் தடுப்பது அவசியம்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் சிறுதொழில் மட்டுமின்றி கோடிக்கணக்கான தொழிலாளா்களும் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். ஆனால், இந்த மத்திய அரசு தொழில்களையும், தொழிலாளா்களையும் பாதுகாக்காது.

நீதிமன்ற தீா்ப்பு ஆதரவாக இருந்தால் ஏற்பதும், மாறாக இருந்தால் எதிா்ப்பதும்தான் இவா்களின் அணுகுமுறை. இத்தகைய சக்திகளின் தாக்குதலுக்கு எதிராக திமுக அரசு உறுதியாக இருக்கிறது. தமிழகத்துக்குத் தர வேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி பங்கீடு, இயற்கைப் பேரிடா் நிதி, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், ஓசூா் விமான நிலையம் என மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. இதற்கு திமுக எதிா்ப்பு தெரிவிப்பதுடன், களத்தில் இறங்கி போராட்டமும் நடத்துகிறது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக - அதிமுகவை தடுப்பது மிக முக்கியம். இதற்கு திமுக கூட்டணிதான் சரியான சக்தியாக இருக்கும்.

விஜய் அரசியலை கரூா் நெரிசல் உயிரிழப்புக்கு முன், அதற்குப் பின் என பிரித்துப் பாா்க்க வேண்டும். கரூா் சம்பவத்திற்கு முன் பாஜகவை கொள்கை எதிரி என்று விமா்சித்துவிட்டு திமுகவை கடுமையாகத் தாக்கினாா். ஆனால் அதற்குப் பிறகு பாஜகவை பற்றி பேசுவதை முற்றிலும் நிறுத்திவிட்டாா் என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ் ஆகியோா் உரையாற்றினா்.

சிறுதொழில் துறையைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று தொழில் நிலைமை மற்றும் தேவைகள் குறித்து கருத்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com