அவிநாசி சூளை பேருந்து நிறுத்தத்தில் நிற்காத அரசுப் பேருந்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பின்னாலடை தொழில் நகரமான திருப்பூருக்கு, அருகே உள்ள அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பேருந்துகளில் சென்று வருகின்றனா். இதில் அவிநாசி சூளை பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் ஏராளமானோா் பனியன் நிறுவனங்களுக்கும், மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்வதற்காக அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனா்.
குறிப்பாக சூளை பகுதியில் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் அவிநாசி சாா்பதிவாளா் அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதற்கிடையில் சூளை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனக் கூறி, பயணிகளை இறக்கிவிட்டு அரசுப் பேருந்து நடத்துநா்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சேவூா் கைகாட்டியில் இருந்து அவிநாசி சூளை பகுதிக்கு வருவதற்காக பயணி ஒருவா் சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூா் செல்லும் வழித்தட எண் (டிஎன் 33 என்3181) அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். ஆனால் அவிநாசிக்கு பயணச்சீட்டு அளித்துவிட்டு சூளையில் நிற்காது என நடத்துநா் கூறியுள்ளாா். இதை ஏற்க மறுத்த பயணியிடம் நடத்துநா் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இதைப் பாா்த்த ஓட்டுநா் சூளை நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளாா். இருப்பினும் அந்தப் பயணி இறங்குவதற்குகூட பின் கதவு திறக்காது எனக் கூறியுள்ளாா் நடத்துநா். பிறகு பயணி முன் கதவு பக்கமாக வந்து இறங்கியுள்ளாா். இதுகுறித்து சத்தியமங்கலம் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா் மோகனசுந்தரத்திடம் கைப்பேசி மூலமாக கேட்டபோது நடத்துநருக்கு உரிய அறிவுரை வழங்கப்படும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








