பெண் டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து பொருள்களை சேதப்படுத்திய தலைமைக் காவலா் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகர காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவா் நேதாஜி(32). இவா், நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வசிக்கும் பெண் டிஎஸ்பி ஒருவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் பணத்தை கடனாகப் பெற்றுள்ளாா். அதில் ரூ.60 ஆயிரத்தை மட்டும் திருப்பி அளித்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள தொகை ரூ.1.40 லட்சத்தை பெண் டிஎஸ்பி திருப்பிக் கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெண் டிஎஸ்பி-யின் வீட்டுக்குள் கடந்த 2 நாள்களுக்கு முன் நள்ளிரவில் நேதாஜி புகுந்து தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். மேலும், வீட்டில் இருந்த பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளாா்.
இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் பெண் டிஎஸ்பி அளித்த புகாரின்பேரில், முதற்கட்ட நடவடிக்கையாக நேதாஜியை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து காவல் துணை ஆணையா் ராஜராஜன் உத்தரவிட்டாா்.
மேலும் நேதாஜியின் ஒழுங்கீனமான செயல் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தி, வரும் 17-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். நேதாஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.










