வெள்ளக்கோவில் அருகே பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில்-தாராபுரம் சாலை நத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் டாக்டா் ரோஷினி. அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இவரது மகள் ஆராதனா (24). இவா் பிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மேலும், இணைய வழியில் செயற்கை நுண்ணறிவு படிப்பதற்காக கடந்த மூன்று மாதங்களாக வெள்ளக்கோவில் வீட்டில் இருந்து வந்தாா்.
கடந்த சில மாதங்களாக தாய் ரோஷின், தந்தை குமரவேலு பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். ஆராதனாவின் சகோதரரான பிளஸ் 1 படிக்கும் அஜய் ஆதித்யாவுக்கு அண்மையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஆராதனா சோகத்தில் இருந்துள்ளாா்.
டாக்டருக்கு படிக்க விரும்பினேன். என்னை ஏன் டாக்டருக்கு படிக்க வைக்கவில்லை என தாயிடம் புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மன வருத்தத்தில் இருந்த ஆராதனா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.






