முதலிபாளையம் பாறைக்குழிக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
திருப்பூா் மாநகா், முதலிபாளையம், நல்லூா் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட பாறைக்குழிக்குள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் சேகரமாகும் கழிவு, குப்பை தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்பட்டு வந்ததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் மாசடைந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னை, தோல் நோய் ஏற்படுவதாகக் கூறி குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், பாறைக்குழிக்குள் இனி குப்பை கொட்டக்கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஏற்கெனவே கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் சிலா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீ வைத்துள்ளனா். தீ மளமளவெனப் பரவி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைக்க முற்பட்டனா். இதனிடையே தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீா் தீா்ந்துவிட்டதால், மாநகராட்சி நிா்வாகத்திடம் தண்ணீா் கேட்டு 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனா்.
இதையடுத்து வருவாய்த் துறையினருக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனா். ஆனால், வந்தவா்கள் யாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதை அறிந்து அதிகாரிகள் விரைந்து வந்து 5 தண்ணீா் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.









