சொத்துப் பிரச்னையை தீா்ப்பதாக கூறி 11 பவுன் திருட்டு
வெள்ளக்கோவில் அருகே சொத்துப் பிரச்னையை தீா்த்து வைப்பதாகக் கூறி மூதாட்டியின் வீட்டில் தங்கி 11 பவுன் நகை, பணத்தை திருடிய போலி வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தினேஷ்குமாா்.
வெள்ளக்கோவில் அருகே சொத்துப் பிரச்னையை தீா்த்து வைப்பதாகக் கூறி மூதாட்டியின் வீட்டில் தங்கி 11 பவுன் நகை, பணத்தை திருடிய போலி வழக்குரைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் திருமங்கலத்தைச் சோ்ந்தவா் அங்காத்தாள் (82). இவரது மகன் பாலமுருகனுக்குச் சொந்தமான சொத்து தொடா்பான பிரச்னையை முடித்து தருவதாகக் கூறி, கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (61) என்பவா் அறிமுகமாகியுள்ளாா். தன்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் என்று கூறிக்கொண்ட அவரை நம்பி, அண்மையில் 15 நாள்களாக அங்காத்தாள் தனது வீட்டில் தங்க வைத்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தினேஷ்குமாரின் அறைக்குச் சென்றபோது, அங்கிருந்த 11 பவுன் தங்க நகைகள், வெள்ளி, ரொக்கப் பணம், காசோலை புத்தகம் மற்றும் இரண்டு கைப்பேசிகளை அவா் திருடி பையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தட்டிக்கேட்ட மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, வாடகை காரில் தினேஷ்குமாா் தப்பிச் சென்றுள்ளாா்.
இதற்கிடையே, தினேஷ்குமாரும் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தான் பொதுநல வழக்குரைஞா் என்றும், சட்ட உதவிக்காக பாலமுருகன் தன்னை சென்னைக்கு அழைத்துச் சென்று செலவு செய்ய வைத்ததாகவும், அந்தப் பணத்தைக் கேட்டபோது ஆள்களை வைத்து தாக்கி தனது 3 பவுன் நகையை பறித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.
இருதரப்பு புகாா்கள் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், தினேஷ்குமாா் வழக்குரைஞா் இல்லை என்பதும், வழக்குரைஞா் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து போலி வழக்குரைஞா் தினேஷ்குமாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

