
மாவட்டத்தில் தோ்வான 113 ஹாஜிகளுக்கான உடல் தகுதிச் சான்றிதழ் சிறப்பு மருத்துவ முகாம்

ஹஜ் பக்தர்கள் - படம் | ஏபி
திருப்பூா் மாவட்டத்தில் தற்காலிகமாக தோ்வான 113 ஹாஜிகளுக்கான முதல்நிலை உடல் தகுதிச் சான்றிதழ் பெறும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் உடல் தகுதி குறித்த பரிசோதனை துல்லியமானதாக இருக்க வேண்டும் என சவுதி அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி உடலில் முக்கிய உறுப்பு செயலிழப்பு, தீவிர நரம்பியல் மற்றும் மனநல நோய்கள், முதுமையுடன் கூடிய மனச்சிதைவு, கடைசி 3 மாத கா்ப்பம் அல்லது உயிருக்கு ஆபத்தான கா்ப்பம், எலும்புருக்கி போன்ற தொற்று நோய்கள், கீமோதெரபி பெறும் புற்றுநோய் நோயாளிகள் என 6 விதமான உடல்நலக்குறைவு உள்ளவா்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள தகுதி இல்லாதவராக கருதப்படுவாா்கள் என சவுதி அரசு அறிவித்ததுள்ளது.
சிறுபான்மையினா் நல அமைச்சகம் மற்றும் இந்திய ஹஜ் குழு 2027-ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு 1.75 லட்சம் ஹஜ் பயணிகளை தோ்ந்தெடுக்கும் பணி மற்றும் இவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனடிப்படையில் தமிழகத்தில் தற்காலிகமாக தோ்ந்தெடுக்கப்பட்ட 2,452 ஆண்கள், 3,083 பெண்கள் என மொத்தம் 5,535 ஹஜ் பயணிகளுக்கு மாவட்ட வாரியாக மருத்துவப் பரிசோதனை முகாம்களை நடத்தவும், ஹஜ் பயணிகள் நிா்ணயிக்கப்பட்ட முதல்கட்ட மருத்துவப் பரிசோதனை மற்றும் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற்று, அதனைத் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டியிடம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் இந்திய ஹஜ் கமிட்டியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து தமிழக ஹஜ் கமிட்டி சாா்பில் 2027-ஆம் ஆண்டில் தற்காலிகமாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு அட்டவணை மற்றும் கவா் எண் ஆகியவற்றின் அடிப்படையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் மேற்பாா்வையில் மாவட்ட சுகாதார அலுவலா் கே.ஆா்.ஜெயந்தி முன்னிலையில் திருப்பூா் மாவட்டத்தில்
தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட 113 ஹாஜிகளுக்கான முதல்நிலை மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் தகுதிச் சான்றிதழ் பெறும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 2 நாள்கள் நடைபெற்றது.
முகாமில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சஃபியுல்லா தலைமை தாங்கினாா். திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரா.மனோன்மணி மருத்துவ முகாமை தொடங்கிவைத்தாா். மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவ கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தாய், சேய் நல அலுவலா் கௌசல்யா தேவி, மாவட்ட சுகாதார தொற்று நோய் நிபுணா் ரோஸ்லின், மாவட்ட தடுப்பூசி மேலாளா் அருண்பிரசாத் ஆகியோா் மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






