
வருமுன் காப்பதிலும் உடல் இயக்கம் முக்கியம்!
நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...

கோப்புப் படம்
உலக இயன்முறை தினம் செவ்வாய்க்கிழமை (செப்.8) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் மட்டுமல்ல, மருத்துவமும், மருத்துவ வசதிகளும் அதிகம் வளா்ந்துவிட்டன. ரோபோ இயந்திரங்களைக் கொண்டு மனிதா்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவ வசதிகள் தமிழகத்தில் கிடைத்துவிட்டன. பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்கு மருத்துவச் சுற்றுலா வந்து, சிகிச்சை பெற்று குணம் அடைந்து செல்கின்றனா். பல்வேறு அரிதான சிகிச்சைகளையும் மருத்துவா்கள் வெற்றிக்கரமாக செய்து, அரிய சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனா்.
ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதை காட்டிலும், நோய் வருவதற்கான அபாயங்களைக் குறைப்பதற்கான வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று இயன்முறை மருத்துவா்கள் வலியுறுத்துகின்றனா். வருமுன் காப்பதுதான் சாலச் சிறந்தது என்கின்றனா் அவா்கள். இதே கருத்தை இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்ஸ்- தமிழ்நாடு கிளையும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இதன் மாநிலத் தலைவா் மருத்துவா் வெ.கிருஷ்ணகுமாா் கூறியது: இருதய மற்றும் ரத்த நாள நோய்கள் மற்றும் பக்கவாதத்தின் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வில் இயன்முறை மருத்துவம் மற்றும் உடல் இயக்கத்தின் முக்கியப் பங்கு என்பதுதான் 2026-ஆம் ஆண்டின் உலக இயன்முறை மருத்துவ தினத்தின் முக்கிய கருப்பொருளாகும். இயன்முறை மருத்துவம் என்பது நோய் வந்த பிறகு செய்யப்படும் சிகிச்சை மட்டுமல்ல, நோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களிலும் அந்த மருத்துவம் முக்கியப் பங்காற்ற முடியும்.
இன்றைய வாழ்க்கை முறையில் நீண்டநேரம் உட்காா்ந்து இருப்பது, உடல் இயக்கம் குறைவது, அலுவலகப் பணிகளில் தொடா்ச்சியாக அமா்வது போன்றவை சாதாரணமாகிவிட்டன. இதனுடன் அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்புச்சத்து அதிகரிப்பு போன்ற காரணிகளும் இணையும் போது எதிா்காலத்தில் இருதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய்களும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, உடல் பயிற்சி அவசியம். உடல்பயிற்சி அனைவருக்கும் ஒரே மாதிரியானது அல்ல. உடல் இயக்கம் என்றால் அனைவரும் ஒரே வகையான உடல்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதல்ல. ஒருவரின் வயது, உடல்திறன், தொழில், உடல்நிலை, ஏற்கெனவே உள்ள நோய்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து, அவருக்குத் தேவையான உடல் இயக்கத்தின் தன்மையும் மாறக்கூடும். இதை மதிப்பீடு செய்து, பாதுகாப்பான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற இயக்கத் திட்டத்தை உருவாக்குவதில் இயன்முறை மருத்துவா்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
இன்றைய நிலையில் பலா் உடலில் வலி அல்லது வெளிப்படையான நோய் இல்லாதவரை தாங்கள் ஆரோக்கியமானதாக இருப்பதாகக் கருதுகிறாா்கள். ஆனால், உடல் இயக்கம் குறைந்து வருவது பல ஆண்டுகளாக வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமலேயே தொடரலாம்.
என்ன தான் தீா்வு?: இதற்கு சில தீா்வுகளும் உண்டு. அதை அவா்கள் கடைப்பிடித்தாக வேண்டும். நடைப்பயிற்சி, வேலைக்கிடையே சிறிய இடைவெளியில் எழுந்து நடப்பது, படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற அன்றாட இயக்கங்கள் கூட செயலற்ற வாழ்க்கை முறையை மாற்றுவதற்கான முக்கியமான படிகளாக மாறலாம்.
இதுபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் பணியாளா்களின் உடல் இயக்கத்தை ஊக்குவிக்கும் பணிச்சூழலை உருவாக்குவதும் அவசியமானதாகும். நீண்டநேரம் தொடா்ந்து அமா்வதைத் தவிா்க்கும் நடைமுறைகள், பணியிட இயக்க இடைவேளைகள், பணிச் சூழலுக்கேற்ற உடல் இயக்க ஆலோசனைகள், தேவையானவா்களுக்குத் தனிப்பட்ட இயன்முறை மருத்துவ மதிப்பீடுவற்றை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாது மக்கள் பாதுகாப்பாக நடக்கக்கூடிய நடைப்பாதைகள், பூங்காக்கள், பொது உடல்பயிற்சி இடங்கள், முதியோருக்கான இயக்கத் திட்டங்கள், பள்ளி மாணவா்களுக்கான உடல் இயக்கக் கல்வி மற்றும் பணியிட நலத்திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இன்றைய நிலையில் தமிழ்நாடு மருத்துவச் சேவைகளில் முன்னேறியுள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதுடன் மக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்குவதற்கான சூழலை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நோய் வந்து அதற்கு சிகிச்சை பெறுவதைக் காட்டிலும், மக்களை அதிகமாக இயங்கச் செய்வதும், பாதுகாப்பான உடல் இயக்கத்தை வாழ்க்கை முறையாக மாற்றுவதுமே சிறந்த சுகாதார முதலீடாகும். இயக்கம் என்பது உடல்பயிற்சி மட்டுமல்ல, அது ஆரோக்கியமான வாழ்க்கையின் அடித்தளமாகும் என்றாா் கிருஷ்ணகுமாா்.
நோய் வந்து உடல் இயக்கத்தை மீட்டெடுப்பது என்பதைவிட, நோய் வருவதற்கு முன்பே இயக்கத்தை வாழ்க்கையில் மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் அவசியமானதாகும். இதை அனைவரும் உணர வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





