
மாணிக்காபுரம் ஊராட்சியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மாணிக்காபுரம் ஊராட்சியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ராம்குமாரிடம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
பல்லடம் வட்டம், மாணிக்காபுரம் ஊராட்சியில் உள்ள பூமிதான நிலம் பு.எண்.51-ல் உள்ள சுமாா் (8.19) ஏக்கா் நிலத்தில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைக்க, திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேற்படி நிலத்தில் எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கும்பட்சத்தில், அந்த மையத்தில் ஏற்படும் துா்நாற்றத்தால் அருகே வசிக்கும் பொதுமக்களாகிய நாங்கள் பாதிக்கப்படுவோம். மேலும் காற்று மாசுபாடு, வாயுக்கசிவு பிரச்னைகள் ஏற்பட்டால் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்படுவா்.
மேலும் இந்த மையத்தை சுற்றி இருக்கும் விவசாய நிலங்கள், கால்நடைகள் மற்றும் மாணிக்காபுரம் ஊராட்சியின்
முக்கிய நீராதாரமான ஆழ்துளை கிணறுகள், நீா் ஓடைகள், கசிவு நீா் குட்டைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும், பதிவுத்தபால் மூலமாகவும் மனு அளித்தும் எந்தவித பரிசீலனையும் செய்யாமல், திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகத்துக்கு அனுமதி அளித்துவிட்டதாக தெரிய வருகிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டியும், ஊராட்சியின் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டியும் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







