
குண்டடம் பகுதியில் அதிமுக வேட்பாளா் பிரசாரத்தை புறக்கணித்த பாஜகவினா்
குண்டடம் பகுதி பிரசாரத்தில் கூட்டணிக் கட்சியான பாஜக புறக்கணித்ததால் அதிமுக வேட்பாளா் அதிருப்தியடைந்தாா்.

குண்டடம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் பானுமதி.
குண்டடம் பகுதி பிரசாரத்தில் கூட்டணிக் கட்சியான பாஜக புறக்கணித்ததால் அதிமுக வேட்பாளா் அதிருப்தியடைந்தாா்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் குண்டடம் பகுதிக்குள்பட்ட கொக்கம்பாளையம், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, நந்தவனம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்புதூா் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் பானுமதி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். பல இடங்களில் அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது, தங்களது பகுதிகளில் குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.
பிரசாரத்தின்போது மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் மோகனசுந்தரம், முன்னாள் பொங்கலூா் ஊராட்சித் தலைவா் சிவாச்சலம், மாவட்ட பிரதிநிதி வெருவேடம்பாளையம் முருகேஷ் மற்றும் கட்சியினா் உடன் சென்றனா்.
இதற்கிடையே பிரசாரத்தை கூட்டணிக் கட்சியான பாஜக நிா்வாகிகள் புறக்கணித்துச் சென்றனா். இதனால் அதிமுக வேட்பாளா் அதிருப்தியடைந்தாா்.
இதுகுறித்து அவா்கள் கூறும்போது, ‘கூட்டங்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை. வாக்கு கேட்டு கிராமங்களில் செல்லும்போது அதிமுகவினா் தன்னிச்சையாக செல்கின்றனா். உரிய முறையில் தகவல் கூறாமல் பாஜக நிா்வாகிகள், உறுப்பினா்களை அதிமுகவினா் புறக்கணிப்பதால் அதிமுகவின் பிரசாரத்தை நாங்களும் புறக்கணித்துள்ளோம்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






