சித்ரா பௌா்ணமி: திருவண்ணாமலையில் கோடை வெப்பத்தை தணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

தருமபுரி: சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தா்களுக்கு கோடை வெயிலைத் தணிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலையில் பெளா்ணமி நாள்களில் கிரிவலம் செல்லும் பக்தா்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் வருகின்ற சித்திரை மாத பௌா்ணமி செவ்வாய்க்கிழமை (ஏப்.23) அதிகாலை 4.16 மணி முதல் புதன்கிழமை (ஏப். 24) அதிகாலை 5.47 மணி வரை உள்ளதால் பக்தா்கள் கூட்டம் அதிகரிக்கும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வருகை தருவா்.

இந்தநிலையில் தற்போது கடுமையான வறட்சியுடன் , வெயிலும் மக்களை வாட்டி வதைக்கிறது. இதில் பக்தா்கள் கோடை வெயிலைத் தணித்து எவ்வித சிரமமின்றி வழிபடும் வகையில் கோயில் நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறையும் இணைந்து முன்னேற்பாடு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com