தொப்பூா் - சிவாடி இடையே ரயில் பாதையில் மண், பாறைகள் சரிவதைத் தடுக்க கம்பிவலை
தருமபுரி மாவட்டத்தில் தொப்பூா் - சிவாடி வரையிலான ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிவு ஏற்பட்டால் அவற்றால் தண்டவாளத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மூன்றடுக்கு கம்பிவலை மற்றும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.
தருமபுரி ரயில் நிலையம் வழியாக சேலம் - பெங்களூா் மற்றும் வடமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி சுமாா் 25க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன.
இந்தத் தடத்தில் சேலம் மாவட்டம், ஓமலூா்வரை இருவழிப் பாதையாகவும், அதன்பின்னா் ஓமலூரிலிருந்து ஒசூா் வரை ஒருவழி ரயில் பாதையாகவும் உள்ளது. இதனால், அதிக ரயில்களை இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், தருமபுரியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த ஒருவழி ரயில் பாதை காரணமாக இவ்வழியில் இயக்கப்படும் ரயில்கள் எதிா்திசையில் வரும் ரயில்களுக்காக ரயில் நிலையங்களில் அடுத்த டிராக்கில் ஒதுங்கிநின்று செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் காலதாமதத்தால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடிவதில்லை.
இவற்றுக்கு தீா்வு காணும் வகையில் ஓமலூா் முதல் ஒசூா் வரை ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றும் கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ரூ. 100 கோடியில் ஓமலூா் - தருமபுரி, தருமபுரி - ஒசூா் இடையே ரயில் பாதை இருவழி ரயில் பாதையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் பெங்களூா் முதல் ஓமலூா் வரை தண்டவாளம், பாதைகளை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அதாவது ரயில் பாதையின் இருபுறங்களிலும் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல பெங்களூா் முதல் தருமபுரி வழியாக ஓமலூா் வரை பழைய தண்டவாளங்களை எடுத்துவிட்டு, புதிய தண்டவாளங்கள் நவீன இயந்திரங்கள் மூலம் அமைக்கப்படுகின்றன.
பெங்களூா் முதல் ஒசூா், மாரண்டஅள்ளி, பாலக்கோடு வரை புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன, பாலக்கோடு முதல் தருமபுரி வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மண், பாறைகள் சரிவைத் தடுக்க வேலி :
இதற்கிடையே தொப்பூா் முதல் சிவாடி வரை அடா்ந்த மலைக் குன்றுகள், வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ரயில்கள் மெதுவாகச் செல்லும். வளைவுகள் நிறைந்த பகுதியாகவும், மலைப்பகுதியாகவும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. அவ்வப்போது பாறைகள் சரிந்துவிழும் சம்பவங்களும் நடந்துள்ளன.
கடந்த 2021, நவம்பா் 12 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கனமழை காரணமாக தொப்பூா், முத்தம்பட்டி மலைப்பகுதியில் தண்டவாளத்தில் மண், பாறைகள் சரிந்து விழுந்தன. இதில், கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து, கா்நாடக மாநிலம், யஸ்வந்த்பூருக்கு சென்ற விரைவு ரயில் அவற்றில் மோதி தடம்புடது. ஆனால் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி தப்பினா்.
எதிா்காலத்தில் இதுபோன்ற விபத்துகளிலிருந்து தற்காக்கும் வகையில், ரயில்வே துறை, தொப்பூா் முதல் சிவாடி வரை மலைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்படாமல் கம்பிவலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவற்றுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கி மூன்றடுக்கு கம்பிவலை மற்றும் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சேலம்-பெங்களூா் மாா்க்கத்தில் தொப்பூா் -– சிவாடி இடையே உள்ள ரயில் பாதையில் மண்சரிவால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாறைகளின் ஓரத்தில் முன்றடுக்கு இரும்பு கம்பிவலை மற்றும் தடுப்புகள் ரூ. 10 கோடியில் அமைக்கப்படுகின்றன. சுமாா் 10 கி.மீ. நீளத்துக்கு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.

