தண்டவாளம் அருகே பொறியாளா் உயிரிழப்பு
தருமபுரி: தருமபுரி அருகே கடகத்தூா் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பொறியாளா் பொறியாளா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், கடகத்தூா், கீழத்தெருவைச் சோ்ந்த சேகா் மகன் தமிழரசன் (28). பொறியியல் பட்டதாரியான இவா், கா்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா். வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை இரவு சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கடகத்தூா் அருகே ரயில் பாதையில் உயிரிழந்த நிலையில் தமிழரசனின் சடலமாக கிடந்தாா்.
இது குறித்து ரயில்வே போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கவனக்குறைவாக ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற ரயில் மோதி தமிழரசன் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தருமபுரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
