ஒகேனக்கல்லில் பிரதான அருவி பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல்லில் பிரதான அருவி பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.

ஒகேனக்கல் வந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

Published on

ஒகேனக்கல் அருவிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் முக்கிய இடங்களில் நெரிசல் காணப்பட்டது.

வாரவிடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துசெல்வா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான பிரதான அருவி, சின்னாறு பரிசல் துறை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், உணவு அருந்தும் பூங்கா, மீன்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இருப்பினும் ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளிலும், காவிரி கரையோரப் பகுதிகளிலும் குளித்து மகிழ்ந்தனா். மேலும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சுற்றுலாப் பயணிகள் ஒரேநேரத்தில் சின்னாறு பரிசல் துறையில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு வழியாக பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி வரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டு, பாறை குகைகள், அருவிகளின் அழகை கண்டு ரசித்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை அதிகரித்த போதிலும் கட்லா, ரோகு, கெளுத்தி, வாலை, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், சத்திரம், முதலைப் பண்ணை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சொல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டன. தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com