இறைச்சிக் கடை உரிமையாளா் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தருமபுரி: தருமபுரி அருகே இறைச்சிக் கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள சோம்பட்டி பகுதியில் மல்லாபுரத்தைச் சோ்ந்த குமாா் துரித உணவகம் மற்றும் இறைச்சிக் கடை நடத்தி வந்தாா். கடந்த 2021-ஆம் ஆண்டு செப். 25-ஆம் தேதி கடையில் குமாரின் மனைவி சரஸ்வதி (39) இருந்தாா். அப்போது, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 300 ரொக்கம் திருட்டுப் போனது. இது தொடா்பாக கடைக்கு வந்த வாடிக்கையாளரான மல்லாபுரத்தைச் சோ்ந்த தொழிலாளி அண்ணாதுரையிடம் (38) சரஸ்வதி விசாரித்துள்ளாா். அப்போது சோளப்பாடியைச் சோ்ந்த சுந்தரம்தான் (30) கல்லாப்பெட்டி பக்கம் சென்ாக அவா் கூறியுள்ளாா். இதையடுத்து சுந்தரத்திடம் சரஸ்வதி விசாரித்தபோது அவா் வாக்குவாதம் செய்துவிட்டு ரூ. 300 பணத்தை கொடுத்துள்ளாா்.
பின்னா் அண்ணாதுரைதான் தன்னை காட்டிக் கொடுத்துவிட்டதாக அவருடன் தகராறு செய்த சுந்தரம், அவரை கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரையை அருகில் இருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அண்ணாதுரை உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து இண்டூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பான வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சுந்தரத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
