தருமபுரியில் சிறுதானிய உணவுத் திருவிழா: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சிறுதானிய உணவுத் திருவிழா கண்காட்சியைப் பாா்வையிடும் ஆட்சியா் ரெ.சதீஸ்
Published on

தருமபுரியில் சிறுதானிய உணவுத் திருவிழாவை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தருமபுரி வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சாா்பில் ஊட்டமிகு சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் கண்காட்சியை திறந்துவைத்து அரங்குகளை பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், ஊட்டமிகு சிறு தானியங்கள் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருள்கள், சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு மற்றும் சிறுதானியங்கள் பயன்படுத்துவதை மக்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட வள

மையம் ஊராட்சிகள் திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அரிசி, உணவுப் பொருள்கள் எளிதாக கிடைப்பதால் சிறுதானியங்களின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி செய்யப்பட்ட உணவுப் பொருளாக உட்கொள்வதன் மூலம் அவற்றின் மகத்துவத்தை உணர முடியும்.

தருமபுரி மாவட்டத்தில் 1,41,460 ஏக்கரில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன. சிறுதானியங்களின் உற்பத்தி திறனை பெருக்கும் வகையில் வீரிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் உற்பத்தியை பெருக்குவதற்கு செயல்விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) ர.ரத்தினம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் இணை இயக்குநா் மு.இளங்கோவன், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா் வெண்ணிலா, வேளாண்மை உதவி இயக்குநா் (விதைச்சான்று) மதியழகன், உதவி வேளாண்மை இயக்குநா் தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com