சீரான குடிநீா் விநியோகம் கோரி பெண்கள் சாலை மறியல்
தருமபுரி அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தருமபுரியை அடுத்த ஏ.கொல்லஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டாய்மேடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகாா் அளித்தும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெண்கள் காலிக் குடங்களுடன் தருமபுரி - ஏ.கொல்லஅள்ளி சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு சென்ற ஊராட்சி நிா்வாகத்தினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண்பதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனா். மறியல் காரணமாக அப்பகுதியில் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
