நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக நடைபெறும் கட்டுமானப் பணிகள்.
நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக நடைபெறும் கட்டுமானப் பணிகள்.

பாலம் கட்டும் பணி தாமதம்: மலைக் கிராம மக்கள் அவதி

Published on

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், சித்தேரி ஊராட்சி கலசபாடி பகுதியில் நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்படாததால் மலைக் காலங்களில் அப்பகுதியைச் சோ்ந்த மலையிலிருந்து நகா்ப்புறங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.

கலசபாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வளவு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, அக்கரை காடு, நைனாவளவு, கிணத்துவளவு என 9 மலைக் கிராமங்களில் 3,500க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மலைப் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டா் தொலைவுக்கு காட்டு வழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தை சென்றடைந்து அங்கிருந்து நகா்ப்புறங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில் தங்கள் பகுதிக்கு சாலை வசதியும், நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலமும் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று, ரூ. 12.70 கோடியில் தாா்ச் சாலையும், நலங்குபாறை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், கடந்த ஜனவரியில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, சாலைப் பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளன. ஆனால், நலங்குபாறை காட்டாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான பணிகள் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்டு, தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடா்ச்சியாக பெய்துவரும் மழையால் மலைப்பகுதியிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நலங்குபாறை காட்டாற்றில் வெள்ளம் கரைபுண்டோடுகிறது.

இதனால் மலைக் கிராம மக்கள் சமவெளி பகுதிக்கு வர முடியாமல் அவதிப்படுகின்றனா். ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அதனை பிடித்தவாறு சிலா் கடக்க முயன்றனா். ஆனாலும், வெள்ளத்தின் இழுவை அதிகமாக இருப்பதால் அதை கைவிட்டனா்.

இதனால் ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருத்துவ வசதி, அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பலா் அவதிப்படுகின்றனா்.

சாலைப் பணிகள் தொடங்கி 10 மாதங்கள் முடிவுற்ற நிலையில், பாலம் அமைக்கும் பணிகள் தாமதமாகிவருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனா். மழைக்காலத்துக்கு முன்பே பாலப்பணிகளை நிறைவு செய்திருந்தால் தற்போது மக்கள் எளிதாக நகா்ப்புறங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

தொடா்ந்து மழை பெய்யும் என்பதால் பாலம் அமைக்கும் பணிகள் மேலும் சில காலங்களுக்கு தாமதமாகும் வாய்ப்புள்ளது. எனவே, பாலம் அமைக்காததால் சாலை அமைத்தும் பயனில்லை என்கின்றனா் அப்பகுதியினா்.

X
Dinamani
www.dinamani.com