தருமபுரி
விபத்தில் சிக்கிய காரிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல்
தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய காரை மீட்டபோது, அதில் கடத்திவரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி - தொப்பூா் சாலையில் சென்ற காா் உம்மியம்பட்டியில் திங்கள்கிழமை அதிகாலை பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்தவா் தப்பிச்சென்றாா்.
இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் தொப்பூா் போலீஸாா் விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டனா். பின்னா், அதில் கடத்திவரப்பட்ட அரசால் தடை செய்யபட்ட 110 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம். இதையடுத்து காருடன் புகையிலைப் பொருள்களை மீட்டு, தப்பிச் சென்ற ஓட்டுநா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
