நாய் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
பென்னாகரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் நாய் குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
பென்னாகரம் அருகே பொச்சாரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முனுசாமி (51). இவா் பெங்களூரு அருகே பொம்மனஅள்ளி பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், பொச்சாரம்பட்டி பகுதிக்கு வந்த முனுசாமி, திங்கள்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் பெரிய பள்ளம் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது சாலையில் நாய் குறுக்கிட்டதில் அதன்மீது மோதி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முனுசாமி, செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
