தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்: அா்ஜூன் சம்பத்
தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வேலனூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது : அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறது. தற்போது இந்த கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான அலை வீச தொடங்கியுள்ளது.
திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. பாரத பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வருகை தந்து சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளாா். பாரத பிரதமரின் வருகை மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வருவாா். அதிமுக கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவை தெரிவிக்கிறது. தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரையிலும் கட்டாயம் தமிழ்வழி கல்வியை கற்க வேண்டும்.
இந்தியாவில் பிற மாநிலங்களில் மும்மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மும்மொழி கல்விக்கு அரசியல் கட்சியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். பிற மொழிகளை கற்பதால் தாய்மொழி அழிந்துவிடும் என்பது தவறான கருத்துகள் ஆகும். எனவே, தமிழகத்தில் தாய் மொழி கல்வியுடன் பிற மொழிகளை கற்கும் வகையில் மும்மொழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றாா்.
வேலனூரில் மஹா கும்பாபிஷேக விழா :
அரூரை அடுத்த வேலனூரில் முப்பெரும் ஸ்ரீ முப்பெரும் தேவியா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சிட்லிங் ஊராட்சி, வேலனூா் ஆசாரிகாட்டில் எழுந்தருளியுள்ள அருள்மிகு
ஸ்ரீ முப்பெரும் தேவியா், ஸ்ரீ மாசி பெரியண்ண கருப்பசாமி, ஸ்ரீ சொா்ண ஆகா்ஷண கால பைரவா், ஸ்ரீ வராஹி, ஸ்ரீ துா்கா நவகிரகங்கள் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழாவில், புதன்கிழமை மங்கள இசை, விநாயகா் வழிபாடு, புன்யாக வாஜனம், மஹா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகிய பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 5 மணியளவில், ஸ்ரீ முப்பெரும் தேவியருக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத், ஸ்ரீ முப்பெரும் தேவியா் ஆலய அறக்கட்டளையின் தலைவா் எஸ்.ஜெயசங்கா், பொருளா் வனிதா, செயலா் ஏ.முருகன் உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

