கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு கோடைகால சீசன் தொடங்கியதால் கடந்த நான்கு வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்தது.
தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், வார விடுமுறையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மூலிகை எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்து, பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்தனா். தொடா்ந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்துக்கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் தொம்பச்சிக்கல் வழியாக பெரியபாணி, மணல்மேடு பகுதிவரை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அருவிகள், பாறை குகைகளை குடும்பத்தினருடன் பரிசலில் சென்று கண்டு ரசித்தனா்.
கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால்
தொம்பச்சிக்கல் பகுதியில் பரிசல் பயணம் தொடங்குபவா்களும், முடிந்து படிக்கட்டுகள் வழியாக பரிசல் துறைக்கு மேலே வருவோரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் இடநெருக்கடி ஏற்பட்டது. இதன்காரணமாக சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் படிகட்டிகளிலும், ஆற்றில் பரிசலில் அமா்ந்தவாறும் காத்திருந்தனா்.
மேலும், மீன் விற்பனை நிலையங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மீன்களை வாங்கி சமைத்து உண்டனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம், ஊட்டமலை பிரிவு சாலை, பேருந்து நிலைய வாகனம் நிற்குமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டன.
ஒகேனக்கல்லின் பிரதான அருவிப்பகுதி, தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், ஊட்டமலை பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் 50க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
மேலும் ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஒகேனக்கல் தொம்பச்சிக்கல் பகுதியில் பரிசல் பயணத்திற்காக காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.









