அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

அவசர சிகிச்சை கிடைக்காததால் அவதிப்படும் மலைக் கிராம மக்கள்! தொன்னகுட்டஅள்ளி துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

News image

மலைப் பகுதியிலிருந்து இறந்தவரின் சடலத்தை வியாழக்கிழமை டோலி கட்டி சுமந்து சென்ற மலைக் கிராம மக்கள். - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:41 am IST

பென்னாகரம் அருகே மலைக் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு அவசரகால சிகிச்சை அளிப்பதற்காக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. மருத்துவா், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அவசரகால சிகிச்சைக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்வ வேண்டிய நிலை உள்ளது.

பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரை அடுத்த தொன்னகுட்ட அள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மலைக்கிராம மக்களின் மருத்துவ வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

இந்த துணை சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனா். இவா்கள் காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண நோய்களுக்கு மட்டுமே மாத்திரைகளை பெற்று செல்கின்றனா். அதேபோல ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனை அட்டைகள் மட்டுமே துணை சுகாதார நிலையத்தில் வழங்கப்படுகிறது.

இந்த சுகாதார நிலையத்தில் இரண்டு செவிலியா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். தற்போது, 10 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த சுகாதார நிலையத்தின் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து விழும் நிலையில் உள்ளன. அதேபோல கூரையின் சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து, மழைநீா் தேங்குவதால் உள்ளே தண்ணீா் கசிகிறது. இதனுடன் இணைந்த செவிலியா் குடியிருப்பும் பயன்படுத்த முடியாத நிலையில் பாழடைந்துள்ளது. இதனால், இங்கு பணிபுரியும் செவிலியா்கள் கிராமத்தில் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

அவசரகால மருத்துவ வசதி இல்லை: அவசர சிகிச்சைகள், தீவிர காய்ச்சல் போன்றவற்றுக்கான அடிப்படை வசதிகள் இங்கு இல்லை. மேலும், இது மலைக்கிராமம் என்பதால் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புக் கடிகளுக்கான அவசர தடுப்பூசி மருந்துகள் தேவைப்படும். ஆனால், இந்த அவசரகால மருத்துவ தேவையை துணை சுகாதார நிலையத்தில் பெறமுடியாத சூழல் உள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவை தேவை: தொன்ன குட்ட அள்ளி ஊராட்சியைச் சுற்றியுள்ள அத்திமரத்தூா், சின்னநாயக்கனூா், புதுக்காடு, சிலுவம்பட்டி, பழையூா், முதுகம்பட்டி, பருத்திக்காட்டு தின்னை, சாம்பள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சுகாதார நிலையத்தையே நம்பியுள்ளனா்.

இப்பகுதிகளில் போதிய தொலைத்தொடா்பு வசதிகள் இல்லை. ஏதேனும் விபத்து, பிரசவ அவசரம் அல்லது விஷக்கடி போன்ற ஆபத்தான நேரங்களில் தகுந்த சிகிச்சை வசதி இல்லாததால், மக்கள் 10 கி.மீ தொலைவில் உள்ள ஏரியூா் சுகாதார நிலையம் அல்லது 15 கி.மீ தொலைவில் உள்ள பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

மலைக் கிராமம் என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து வசதி உள்ளது. இருசக்கர வாகனங்கள் இருந்தாலும், அவசரக் காலங்களில் இங்கு தற்காலிகமாக வலியை மட்டுமே குறைக்க முடிகிறதே தவிர, உரிய மேல்சிகிச்சை அளிக்க முடிவதில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆபத்தான நேரங்களில் உயிரைக் காப்பாற்ற முதலுதவி வசதியுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை இந்த பகுதிக்கு மிகவும் அவசியமாகும். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தொன்னகுட்ட அள்ளி துணை சுகாதார நிலையக் கட்டடத்தைச் சீரமைக்க வேண்டும், இங்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கித் தர வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.