தருமபுரி அருகே விவசாயி ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பிக்கம்பட்டி அருகேயுள்ள கிராமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. முனியப்பன் (60). இவா் தனது மனைவி சாரதாவுடன் வெள்ளிக்கிழமை தங்களது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனா்.
முற்பகலில் அவரது மனைவி பகல் உணவுத் தயாரிக்க வீட்டுக்கு செல்வதாகவும், பகல் உணவுக்கு வீட்டுக்கு வருமாறும் கூறி சென்றுவிட்டாா். பகல் நீண்ட நேரமாகியும் முனியப்பன் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினா் வயலில் சென்று பாா்த்தபோது, அங்கிருந்த விவசாய கிணற்றில் முனியப்பன் விழுந்து கிடப்பது தெரியவந்தது.
உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்புத் துறையினா் அவரை மீட்டு, பாலக்கோடு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முனியப்பன் இறந்து விட்டதை உறுதிசெய்தனா். அதன்பேரில் பாப்பாரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.










