/

மொரப்பூர் அருகே ரயில் பாதையில் சிமென்ட் கற்கள்: போலீஸார் விசாரணை

தருமபுரி மாவட்டம்,  மொரப்பூர்  அருகே ரயில் பாதையில் சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:47 am IST

தருமபுரி மாவட்டம்,  மொரப்பூர்  அருகே ரயில் பாதையில் சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மொரப்பூர் அருகே சென்னை -   சேலம் ரயில் பாதையில்,  சிறிய அளவிலான சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்தது திங்கள்கிழமை மாலை 5.30  மணியளவில் தெரிய வந்தது.
சென்னையில் இருந்து மேட்டூருக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் ஓட்டுநர்,   மொரப்பூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதையில்  (ரயில்வே கம்பம் எண் : 266 /14)  சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்துள்ளார்.  தொடர்ந்து,  அவர் ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, சம்பவ இடத்தில் ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்தனர். 
 ரயில் பாதையில் சிமென்ட் கற்களை சிறுவர்கள் யாரேனும் வீசிச் சென்றார்களா ?  அல்லது மது போதையில் மர்ம நபர்கள்  சிமென்ட் கற்களை வைத்துச் சென்றனரா? என்பது குறித்து ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசி,   உதவி ஆய்வாளர் அப்புசாமி ஆகியோர் அடங்கிய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் காரணமாக திங்கள்கிழமை மாலை சென்னையில் இருந்து மங்களூரு நோக்கிச் சென்ற விரைவு ரயில் சுமார் 45 நிமிடம் கால தாமதமாகச் சென்றதாக ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.