அம்மா பூங்கா, உடற்பயிற்சிக் கூடங்கள் பராமரிப்புத் திட்டமின்றி வீணாகும் அபாயம்!

விசாலமான இட வசதி,அழகிய வண்ணப் பூச்சு ஆகியவற்றுடன் தயாராகிவரும் அம்மா பூங்கா மற்றும்
Published on

விசாலமான இட வசதி,அழகிய வண்ணப் பூச்சு ஆகியவற்றுடன் தயாராகிவரும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள்,  முறையான பராமரிப்புத் திட்டம் இல்லாததால்,  வீணாகும் அபாயம் உள்ளது.
அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என கடந்த 2016 ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து,  மாநிலம் முழுவதும் ரூ.100 கோடியில் 500 இடங்களில் அம்மா பூங்காக்களும்,  ரூ.50 கோடியில் 500 இடங்களில் அம்மா உடற்பயிற்சிக் கூடங்களும் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதில், தருமபுரி மாவட்டத்துக்கு 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
தருமபுரி வட்டத்தில் இலக்கியம்பட்டி ஊராட்சியில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியிலும்,  நல்லம்பள்ளி வட்டத்தில் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில் காமராஜ் நகரிலும், அரூர் வட்டத்தில் தீர்த்தமலை ஊராட்சியிலும்,  பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சித்தேரி ஊராட்சி,  சித்தேரி மலைமீதும் பணிகள் முடிந்துவிட்டன.
பென்னாகரம் வட்டத்தில் ராமகொண்டஅள்ளி ஊராட்சி மற்றும் பருவதனஅள்ளி ஊராட்சியிலும்,  மொரப்பூர் வட்டத்தில் தாளநத்தம் ஊராட்சி மற்றும் மொரப்பூர் ஊராட்சியிலும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.  காரிமங்கலம் வட்டத்தில் பெரியாம்பட்டி ஊராட்சியிலும்,  பாலக்கோடு வட்டத்தில் கெரகோடஅள்ளி ஊராட்சியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பூங்காவுக்கு தலா ரூ.20 லட்சம்,  உடற்பயிற்சிக் கூடத்துக்கு தலா ரூ.10 லட்சம் என மொத்தம் 10 இடங்களுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  மொத்தம் 1,500 சதுர மீட்டர் பரப்பளவில்,  உடற்பயிற்சிக் கூடம் மட்டும் 95 சதுரமீட்டர்.
சுற்றுச்சுவர்,  நடைப்பயிற்சிக்கான பேவர் பிளாக் தடம்,  குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள்- 4,  வளாகத்துக்கு உள்ளேயே கழிப்பறை வசதி,  பூங்காவுக்கு வெளியே கழிப்பறைக்கான நச்சுத்தொட்டி,  உடற்பயிற்சிக் கூடத்தில் 19 வகையான நவீன உபகரணங்கள்,  அமர்ந்து பொழுதைப் போக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நாற்காலிகள் என முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால்,  தொடர்ந்து பராமரிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படாததால்,  திறக்கப்படுவதற்கு முன்பே கோளாறுகள் தொடங்கிவிட்டன.  குறிப்பாக,  பூங்காவைப் பராமரிப்பதற்கு தோட்டக்காரர் அல்லது காவலர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை.  இதனால், பணி முடிந்திருக்கும் ஏ.ஜெட்டிஅள்ளி- காமராஜ் நகர் பூங்காவில் இப்போதே 4 மின் விளக்குகள் திருடப்பட்டு விட்டன.  புல்தரைகள் காய்ந்து விட்டன.
கழிப்பறைக்கும்,  செடிகளுக்குமான தண்ணீர் கிடைப்பதற்காக ஆழ்குழாய் வசதி செய்யப்படவில்லை.  சித்தேரி மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அருகிலுள்ள ஏரியில் இருந்து நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றுகின்றனர்.
அதேபோல,  சித்தேரியிலுள்ள பூங்காவுக்குச் செல்லும் வழித்தடம் முறையாக தார்ச்சாலை ஆக்கப்படவில்லை.  இதற்கான நிதி ஒதுக்கீடு பூங்கா திட்டத்தில் இல்லை.
பொதுவாக,  நடைமுறையில் எழும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான திட்டம் ஏதுமின்றி,  பூங்காக்கள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளிடம் கேட்டபோது,  சாலை வசதிக்கு வரும் காலத்தில் வேறு ஏதாவதொரு திட்டத்தில் இருந்து ஏற்பாடு செய்வோம். பராமரிப்பை அந்தந்த ஊராட்சிகளிடம் விடும்போது படிப்படியாக சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.
    தருமபுரி மாவட்டத்தில் இந்தப் பூங்காக்களை முறையாகப் பராமரிப்பதற்கு திறப்பு விழாவுக்கு முன்பே முறையான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தனிக் கவனம் எடுத்து மேற்கொண்டால்,  இத் திட்டம் காலத்துக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com