அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைவது எப்போது? இழப்பீடு வழங்க கோரிக்கை

மூன்றாண்டுகளாக நடைபெறும் தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும்

Updated On :8 அக்டோபர் 2018, 8:36 am IST

மூன்றாண்டுகளாக நடைபெறும் தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைவது எப்போது எனவும், தங்களது நிலத்துக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, கடந்த 2015-ஆம் ஆண்டு தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து, 2015 டிசம்பர் 30-ஆம் தேதி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலஎடுப்பு தொழிற்சாலைத் துறை அரசாணை எண் 284-ஐ வெளியிட்டது. 
தருமபுரி அருகேயுள்ள நல்லம்பள்ளி வட்டத்தில், 1,183 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், 550 ஏக்கர் பட்டா நிலம் என மொத்தம் 1,733 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பேட்டை அமையும் என தெரிவிக்கப்பட்டது. இதில், அதகப்பாடி வருவாய் கிராமத்தில் 697.52 ஏக்கர், தடங்கம் வருவாய் கிராமத்தில் 224.5 ஏக்கர் மற்றும் 922.02 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் அடங்கும். 
இதையடுத்து, நிலம் கையகப்படுத்த மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) தலைமையில் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் அடங்கிய தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான அலுவலகம் தருமபுரி அப்பாவு நகரில் அமைக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்துக்கு சொந்தமானவர்களை அணுகி, சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் பெறுவது தொடர்பான பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில விவசாயிகள் நிலம் தர மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பணிகள் முடிந்து கோப்புகள் தருமபுரி ஆட்சியர் வழியாக அத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இருப்பினும், கடந்த மூன்றாண்டுகளாக சிப்காட் தொழிற்பேட்டைக்கு என நிர்ணயிக்கப்பட்ட இடமான 1,733 ஏக்கர் நிலத்தை முழுமையாக கையகப்படுத்தவில்லை. தொழிற்பேட்டை அமைய உள்ள பகுதிகளில் நிலம் எடுப்பு தொடர்பான அரசாணை வெளியிட்ட உடன் அந்த பகுதியில் உள்ள நிலத்தை விவசாயிகள் விற்கவோ, பத்திரப்பதிவு செய்யவோ இயலாத வகையில், நிலஅளவை எண்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இச் சூழலால் விவசாயிகள் தங்களது நிலத்தை விற்க இயலாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில், தொழிற்பேட்டைக்கு வழங்குவதாக அறிவித்த நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகை எவ்வளவு வழங்கப்படும் என்பது போன்ற விவரங்கள் ஏதும் இதுவரை தெளிவாக அறிவிக்காததால், கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமைதாரர்கள் குழப்பத்திலும், எப்போது இழப்பீடு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
எனவே, சிப்காட் தொழிற்பேட்டைக்கு கையகப்படுத்தப்படும் பட்டா நிலத்துக்கு தற்போதுள்ள சந்தை மதிப்புபடி, நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். பட்டா நிலத்தில் உள்ள தென்னை, பனை, மா போன்றவற்றுக்கு இழப்பீடு தொகை குறித்து அறிவிக்க வேண்டும். நில அளவை எண்ணில் ஒரு குறிப்பிட்ட நிலத்தை மட்டும் தொழிற்பேட்டைக்கு கையகப்படுத்தும் நிலையில், மீதமுள்ள நிலத்தை விற்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும். இது தொடர்பான விவரங்களை விவசாயிகளிடம் அறிவிக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.