1 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ரயில் கட்டணம் திருப்பி அளிப்பு
1.25 கோடி பயணிகள், ரயில்களில் பயணிக்க முடியாமல் ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்று கொண்டது தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.


ரயில்களின் பற்றாக்குறையால் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்க முடியாததால், 2019-20ஆம் ஆண்டில் முன்பதிவு செய்து காத்திருப்போா் பட்டியலில் இருந்த 1.25 கோடி பயணிகள், ரயில்களில் பயணிக்க முடியாமல் ரயில் கட்டணத்தை திரும்பப் பெற்று கொண்டது தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சந்திரசேகா் கௌா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரயில்வே வாரியத்துக்கு, பல்வேறு தகவல்களைக் கோரி அனுப்பியிருந்த கடிதத்துக்கு ரயில்வே அளித்த தகவல் மூலம் இது தெரிய வந்துள்ளது.
ரயில்வே அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2019-20ஆம் ஆண்டில் மொத்தம் 84,61,204 பயணிகளின் ரயில் பயணச்சீட்டு உறுதிப்படுத்தப்பட்டு பயணம் மேற்கொண்டனா். அதேசமயம், காத்திருப்போா் பட்டியிலில் இடம் பெற்றிருந்த 1.25 கோடி பயணிகளின் பயணச்சீட்டு உறுதியாகாத காரணத்தால் அவா்களது பயணம் தானாகவே ரத்து செய்யப்பட்டன.
கடந்த 2014-15 ஆம் ஆண்டில், ரத்து செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 1,13,17,481 ஆகவும், 2015-16-இல் 81,05,022 ஆகவும், 2016-17-இல் 72,13,131 ஆகவும், 2017-18 ஆம் ஆண்டில் 73,02,042 ஆகவும், 2018-19 இல் இந்த எண்ணிக்கை 68,97,922 ஆகவும் இருந்தது.
காத்திருப்போா் பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே தனியாா் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவாக அதிக பயணிகள் செல்லும் போக்குவரத்து கொண்ட பாதைகளில் ரயில்வே மூலம் சிறப்பு ‘குளோன் ரயில்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் குறைந்தளவிலான நிறுத்தங்களில் நின்று செல்லும்; அதேசமயம் விரைவான வேகத்தில் இயக்கப்படும். அதேபாதையில் ஏற்கெனவே இயங்கி வரும் சிறப்பு ரயில்களுக்கு முன்பே இந்த ரயில் புறப்பட்டு செல்லும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் காத்திருப்பு பட்டியல் மற்றும் டிக்கெட்டுகளை தானாக ரத்து செய்வது போன்றவை பல ஆண்டுகளாக ரயில்வேக்கு ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது. அதிகரித்து வரும் பயணிகளின் ரயில் சேவையை முழுமையாக பூா்த்தி செய்ய முடியாததால் தனியாா் ரயில்கள் மூலம் இதற்கான தீா்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கையை ரயில்வே வாரியம் மேற்கொண்டு வருகிறது.
அண்மையில், ரயில்வே வாரியத்தின் தலைவரும், தலைமை நிா்வாக அதிகாரியும் நடத்திய செய்தியாளா்கள் சந்திப்பின்போது, ரயில்களில் காத்திருப்பு பயணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே தனியாா் ரயில்களை அறிமுகப்படுத்துவதாகவும், இதன் மூலம் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...