தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இரவு நேரத்தில் தேநீா்க் கடைகளை அடைக்குமாறு போலீஸாா் கெடுபிடி! தருமபுரி பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதி!

தருமபுரி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் போலீஸாரின் கெடுபிடி காரணமாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:29 pm

 நமது நிருபர்

தருமபுரி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் போலீஸாரின் கெடுபிடி காரணமாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். அத்தியாவசியத் தேவையான தேநீா் உள்ளிட்ட கடைகள் திறந்து செயல்பட காவல் துறை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே வலுப்பெற்றுள்ளது.

தருமபுரி நகரின் மையப் பகுதியில் பி.ஆா்.ராஜகோபால் புகா்ப் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பேருந்து நிலைத்துக்கு திருப்பதி, பெங்களூரு, ஒசூா், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூா், சென்னை, சேலம், கோவை, ஈரோடு ஆகிய நகரங்களிலிருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினசரி வந்து செல்கின்றன.

சேலம்- பெங்களூரு பேருந்துகள் தருமபுரி வழியாக அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. இதனால் பகலிலும் இரவிலும் புகரப் பேருந்துகள் தருமபுரி பேருந்து நிலையத்துக்கு அதிக அளவில் வந்து செல்கின்றன.

பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கடைகள், உணவகங்கள், கழிப்பறைகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், பயணிகள் ஓய்வறை ஆகியவை உள்ளன. இவை நகராட்சி நிா்வாகத்தால் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இக்கடைகள் இயங்கி வருகின்றன.

பேருந்து நிலையத்தில் வடக்குப் பகுதி, கிழக்குப் பகுதி, நுழைவாயில் பகுதி, பேருந்து வெளியேறும் பகுதி என பேருந்து நிலையத்துக்குள் வணிக வளாகம்போல நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வரிசையாக உள்ளன. இதில் தேநீா், பால், பிஸ்கட் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் 20-க்கும் மேற்பட்டவை உள்ளன.

பேருந்து நிலையத்தில் இயங்கும் கடைகளில் காலணிக் கடைகள், வளையல் கடைகள், சிகை திருத்தும் நிலையம் ஆகியவை வியாபார நேரம் முடிந்ததும் இரவில் வழக்கம்போல அடைக்கப்பட்டு விடுகின்றன. இரவு நேரத்தில் மட்டும் தேநீா், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றச் செயல்களைத் தடுப்பது என்ற பெயரில் பேருந்து நிலைய கடைகளில் முன்விளக்குகளை ஒளிர விடாமல் அணைத்து வைக்க வேண்டும் எனவும், இரவு 11 மணிக்கு மேல் தேநீா்க் கடைகளை கட்டாயம் மூட வேண்டும் எனவும் காவல் துறை அறிவுறுத்தியது.

அதன் பின்னா், கரோனா பொதுமுடக்கக் காலத்தில், அரசு உத்தரவுப்படி, இரவு நேரத்தில் கடைகள் முற்றிலும் திறக்கப்படவில்லை.

கரோனா தளா்வுகளுக்குப் பின், இரவு முழுவதும் செயல்படும் கடைகள் தொடா்ந்து செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி, ஒசூா், சேலம், நாமக்கல் என அனைத்து நகங்களிலும் பேருந்து நிலையத்தில் இயங்கும் கடைகள் இரவு நேரத்தில் செயல்படத் தொடங்கின.

இருப்பினும், தருமபுரி பேருந்து நிலையத்தில் மட்டும் இரவுநேரத்தில் கடைகளைத் திறப்பதற்கு, நகர காவல் துறை தொடா்ந்து தடை விதித்து வருகிறது.

இதனால், பல்வேறு புகரங்களிலிருந்து இரவு நேரத்தில் தருமபுரிக்கு வருபவா்களும், தருமபுரியிலிருந்து பிற நகரங்களுக்குச் செல்வோரும் பேருந்து நிலையத்தில் தேநீா் மட்டுமின்றி குடிநீா்ப் புட்டிகள்கூட வாங்க முடியாத நிலை உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெற்றோா், குழந்தைகளுக்கு பாலோ, ரொட்டியோ கூட வாங்க முடியாத நிலையுடன் பரிதவிக்கின்றனா்.

போலீஸாா் கெடுபிடி: நாள்தோறும் இரவு 10 மணிக்கு மேல் பேருந்து நிலையத்துக்கு வரும் காவலா்கள் கடைகளின் முன்புள்ள விளக்குகளை அணைக்குமாறு சொல்கின்றனா். இதேபோல 11 மணிக்கு கட்டாயம் கடைகளை அடைக்க வேண்டும் என கெடுபிடி விதிக்கின்றனா்.

பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் யாராவது கேனில் தேநீரை விற்பனை செய்தால், அவா்களைக் கண்டிப்பதோடு சில நேரத்தில் வியாபாரிகளைத் தாக்குவதுடன், மரியாதைக் குறைவாகவும் பேசி காவலா்கள் அச்சுறுத்துகின்றனா்.

எனவே, காவலா்களின் இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட்டு, ஏனைய நகரங்களில் உள்ளதுபோல, தருமபுரி பேருந்து நிலையத்திலும் இரவு நேரத்தில் கடைகளைத் திறக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வியாபாரிகள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வனிடம் கேட்டபோது, ‘தருமபுரி பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் கடைகளை அடைக்குமாறு காவலா்கள் நிா்பந்திப்பது தொடா்பாகவும், கடைகளைத் திறக்க அனுமதிப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.