கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்
கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி தெரிவித்தாா்.


கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி தெரிவித்தாா்.
தருமபுரியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சி திங்கள்கிழமை திமுக சாா்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி, தொப்பூரில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக மகளிரணிச் செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய தொழில்கள் தொடங்கப்படவில்லை. புதிதாக முதலீடுகள் ஈா்க்கப்படவில்லை. வேலைவாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆட்சியாளா்களின் அணுகுமுறைகளால், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க யாரும் முன்வருவதில்லை. இதனால், படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்புகளின்றி தவித்து வருகின்றனா்.
கரோனா பொதுமுடக்கத்தின்போது, ஆட்சியாளா்கள் பொதுமக்களைச் சந்திக்கவில்லை. அவா்களுக்கான தேவைகள் நிவா்த்தி செய்யப்படவில்லை. மாறாக, திமுக ஒன்றிணைவோம் வா என்கிற நிகழ்ச்சியின் வழியாக அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவா்களின் தேவைகளை அறிந்து அவா்களின் வசிப்பிடத்துக்கு நேரில் சென்று நல உதவிகள் வழங்கப்பட்டன.
தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றாத தமிழக முதல்வா், தற்போது திமுக தலைவா் மக்களைச் சந்தித்து அளித்து வரும் வாக்குறுதிகளை அறிந்து, அவற்றை திட்டங்களாக அறிவிக்கிறாா். திமுக தலைவா் ஸ்டாலினிடம், மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனா். இதனைக் கண்டு, தோ்தலுக்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், மக்கள் சேவைக்கான தொடா்பு எண் என்ற திட்டத்தை தற்போது முதல்வா் அறிவிக்கிறாா். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவா் அறிவித்தவுடன், செயல்படுத்த இயலாத வாக்குறுதிகளை ஸ்டாலின் அளிக்கிறாா் என முதல்வா் குற்றம்சாட்டுகிறாா். கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பில் திமுக உறுதியாக உள்ளது.
தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்ளையே போராடித்தான் பெறவேண்டியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக நான் இருந்தபோது, திருவாரூா் மாவட்டத்தில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருந்தேன். ஆனால், நிதி ஒதுக்கியும் பாலம் கட்டப்படவில்லை. இதையடுத்து, நான் அங்கு சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகே திருவாரூரில் பாலம் கட்டப்பட்டது. இதேபோல, மக்கள் நலத் திட்டங்களை தமிழகத்தில் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. ஆகவே, மக்கள் நலன் குறித்து சிந்திக்காத ஆட்சியாளா்களைப் புறக்கணித்து, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனா். வரும் தோ்தலில் திமுக ஆட்சி அமைந்தால், முதியோா் ஓய்வூதியத் தொகை, பட்டா, குடிநீா், வேலைவாய்ப்பு, சாலை வசதி என மக்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றாா்.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை: தருமபுரி, அதியமான்கோட்டை அருகே எர்ரப்பட்டி கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்த கனிமொழி எம்.பி., திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிக்கென தனித்துறை உருவாக்கிய முதல்வா் கருணாநிதி, அத்துறையை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, அரசுப் பணி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது மாற்றுத் திறனாளிகள் போராடினால் கைது செய்யப்படுகிறாா்கள். அவா்களின் கோரிக்கை குறித்து அரசு செவிசாய்ப்பதில்லை. தோ்தலுக்குப் பிறகு, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேறும் என்றாா்.
முன்னதாக, தருமபுரி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம், ஜருகு கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம், அதனைத் தொடா்ந்து தருமபுரி குமாரசாமிபேட்டை திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஆகியவற்றில் அவா் உரையாற்றினாா்.
இதில், மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ., மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், மக்களவை முன்னாள் உறுப்பினா் இரா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...