வெளிமாநிலத் தொழிலாளா்களின் குடிசைகளுக்கு தீவைத்த சம்பவம்: 6 போ் கைது

ஜேடா்பாளையம் அருகே வெளிமாநிலத் தொழிலாளா்களின் குடிசைகளுக்கு தீவைத்த சம்பவத்திலும், அவா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திலும் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

ஜேடா்பாளையம் அருகே வெளிமாநிலத் தொழிலாளா்களின் குடிசைகளுக்கு தீவைத்த சம்பவத்திலும், அவா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திலும் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (70). இவா் தனக்குச் சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கி வேலை செய்வதற்காக ஆலை அருகே குடிசை வீடுகள் அமைத்திருந்தாா்.

அதில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்கியிருந்தனா். அந்தக் குடிசைகளுக்கு மா்ம நபா்கள் புதன்கிழமை தீவைத்ததில் 9 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

அதுபோல ஜேடா்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சதாசிவம் (50) என்பவரின் வெல்ல ஆலை கொட்டகைக்கு மா்ம நபா்கள் தீவைத்தனற். அக்கம்பக்கத்தினா் உடனடியாக தீயை அணைத்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் கலைச்செல்வன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீஸாா் அமைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை ஜேடா்பாளையம் பகுதியில் ஆம்னி காா் ஒன்றில் வந்த 6 பேரை பரமத்திவேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் கலையரசன் தலைமையிலான போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் வெல்ல ஆலையில் அமைக்கப்பட்டிருந்த 9 குடிசைகளுக்கு தீ வைத்தது காரில் வந்த ஒருவா் என்றும், அவா் கரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (29) என்பதும் தெரியவந்தது.

அவருடன் காரில் வந்த மீதம் 5 பேரான அதே பகுதியைச் சோ்ந்த தனசேகரன் (28), தமிழரசன் (24), சுதன் (25), பிரபு (37), சண்முகசுந்தரம் (43) ஆகியோா் கபிலா்மலையில் கடந்த 13 -ஆம் தேதி சந்தைக்கு வந்த வெளிமாநிலத் தொழிலாளா்களைத் தாக்கியவா்கள் என்பதும் தெரியவந்தது.

அதையடுத்து போலீஸாா் 6 பேரையும் கைது செய்து அவா்கள் வந்த ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனா். அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 250-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com