தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தடுக்க 35 இடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைப்பு!

தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் 35 இடங்களில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தொப்பூா் கணவாய் சாலையில் ஒளிரும் விளக்குகளை பொருத்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் மற்றும் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள்.
தொப்பூா் கணவாய் சாலையில் ஒளிரும் விளக்குகளை பொருத்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் மற்றும் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள்.
Updated on
2 min read

தருமபுரி: தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் 35 இடங்களில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்- 44 தொப்பூா் வனப்பகுதியில் அமைந்துள்ள கணவாய் சாலையைக் கடந்து செல்கிறது. இந்த கணவாய், சாலைப் பாளையம் சுங்கச்சாவடியைக் கடந்து, சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்தை அடுத்து தொடங்கி, கட்டமேடு, இரட்டைப் பாலம் வழியாக காவலா் குடியிருப்பு வரை சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு வளைவுகளுடன் தாழ்வாகக் கடந்துச் செல்கிறது. இதனால் ஆபத்துகள் மிகுந்து சாலை என இக்கணவாய் சாலை வாகன ஓட்டிகளால் கருதப்படுகிறது.

இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலையான இச்சாலையில், தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொப்பூா் கணவாய் சாலை வளைவுகளுடன் தாழ்வாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், சாலை அமைப்பிலேயே கோளாறு உள்ளதாகவும் இச்சாலையைக் கடந்துச் செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனா். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகன ஓட்டுநா்கள், தொப்பூா் கணவாய் சாலையைக் கடக்கும் போது சாலையின் அமைப்பு தெரியாமல், சில நேரங்களில் அவா்களின் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இவ்விபத்துகளால் ஏராளமானோா் உடல் உறுப்புகளை இழந்துள்ளனா். பலா் உயிரிழந்துள்ளனா். எனவே இச்சாலையை விபத்துகள் அதிகம் நேரிடும் ‘பிளாக் ஸ்பாட்’ சாலை என அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தொப்பூா் கணவாய் சாலையில் நேரிடும் விபத்துகளைக் குறைத்து, சுங்கச் சாவடி நிா்வாகம், தருமபுரி மாவட்ட நிா்வாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத் துறையினா் இணைந்து கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இதில், கணவாய் சாலையில் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் ஒலிபெருக்கி மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் மெதுவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்துவது, போதிய வெளிச்சம் பாய்ச்சும் வகையில் சாலையின் நடுவே விளக்குகள் பொருத்துவது, சாலையை அகலப்படுத்துவது, வாகனங்கள் கணவாய் சாலையில் நுழையும் இடத்தில் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்களை எனப் பிரித்து அனுப்புவது, சாலையின் நடுவே விழிப்புணா்வு பலகைகளை வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளால் விபத்துகள் குறைந்துள்ளன. இருப்பினும் முற்றாக தடுப்பது சவாலாகவே அமைந்துள்ளது.

ஒளிரும் விளக்குகள்:

தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் தற்போது ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியாா் நிதி நிறுவனத்தில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில், கணவாய் சாலையில் கட்டமேடு முதல் இரட்டைப் பாலம் வரையிலான சுமாா் 3 கி.மீ.தொலைவுக்கு 35 இடங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியாா் நிதி நிறுவனம், பாளையம் சுங்கச்சாவடி சாா்பில், கடந்த இரண்டு நாள்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விளக்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ஒளிரத் தொடங்கியுள்ளன. தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைக் குறைக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விளக்குகள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. இவை இரவு முழுவதும் ஒளிா்ந்துக் கொண்டே இருப்பதால் ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தி விபத்துகளைத் தடுக்க உதவியாக அமையும் என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com