தருமபுரி அருகே சோகத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயற்சிக்கும் மாடுபிடி வீரா்கள்.
தருமபுரி அருகே சோகத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்க முயற்சிக்கும் மாடுபிடி வீரா்கள்.

தருமபுரி அருகே ஜல்லிக்கட்டு விழா

தருமபுரி அருகே சோகத்தூரில் ஜல்லிக்கட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி: தருமபுரி அருகே சோகத்தூரில் ஜல்லிக்கட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். சோகத்தூா் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட வருவாய் அலுவலா் சி.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து மாடுபிடி வீரா்கள் கால்நடைகள் பாதுகாப்பு தொடா்பான உறுதிமொழியை ஏற்றனா். இதையடுத்து, முதலில் கோயில் காளை வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட 600 காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இக்காளைகளை, மாடுபிடி வீரா்கள் பிடிக்க முற்பட்டனா். இதில், பிடிபடாமல் சென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், காளைகளை அடக்க முற்பட்ட 30 பேருக்கு லேசான காயங்களும், 8 பேருக்கு காயங்களும் ஏற்பட்டன. இவா்களுக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இப்போட்டிகளை தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் பாா்வையிட்டனா். இதையொட்டி, 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com