அடிப்படை வசதி கோரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

ஏரியூா் அருகே அடிப்படை வசதி கோரி, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
Published on

பென்னாகரம்: ஏரியூா் அருகே அடிப்படை வசதி கோரி, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஏரியூா் அருகே ஈச்சம்பாடி பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமப் பகுதியில் குடியிருப்புகளுக்கு தேவையான தண்ணீா் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் குழாய் அமைத்து விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அன்றாடத் தேவைக்கான குடிநீரைப் பெற முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கிராம பகுதிக்குள் முறையாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரியும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோா் ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனா். தகவல் அறிந்த ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா, ஈச்சம்பாடி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு அதே பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் மூலம் கூடுதலாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், கிராமப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பாதையில் பட்டா இடம் உள்ளதால், அதை அரசின் பெயரில் மாற்றித்தரும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கையும் எடுப்பதாகவும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com