‘இளம்வயது திருமணத்தை முற்றிலும் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’

Published on

இளம்வயது திருமணங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பள்ளி அளவில் போதிய விழிப்புணா்வு அளிக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி நகராட்சி அலுவலக கூட்டரங்கில், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த காலண்டு விழிப்புணா்வு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் இரா.சேகா் முன்னிலை வகித்தாா். நகா்நல அலுவலா் லட்சியவா்ணா, வட்டார குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜெயசீலன், தொழிலாளா் நல உதவி ஆணையா் திவ்யா ஆகியோா் பேசினா்.

இதில், இளம்வயது திருமணங்களை முற்றிலும் தடுக்க பள்ளி அளவில் போதிய விழப்புணா்வை மாணவியருக்கு ஆசிரியா்கள் வழங்க வேண்டும். அதேபோல, இளம்வயதில் கா்ப்பம் தரித்தலை தவிா்க்க வேண்டும். பெண் குழந்தைகள் தங்களை யாரும் தொட அனுதிக்கக் கூடாது. இதுதொடா்பாகவும், போக்சோ வழக்கில் உள்ள சட்டப் பாதுகாப்பு மற்றும் அவற்றின் பயன்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல, பள்ளிகளில் நடைபெறும் பெற்றோா் - ஆசிரியா் கூட்டத்தில் மதிப்பெண்கள் குறித்து மட்டும் வலியுறுத்தாமல், மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடி அவா்களிடம் அரவணைப்போடு நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், சுகாதார அலுவலா்கள், நகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com