பாமகவினா் ஆா்ப்பாட்டம்: தருமபுரி எம்எல்ஏ உள்பட 71 போ் கைது


சென்னையில் பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணியை கைது செய்ததை கண்டித்து, தருமபுரி நகரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்பட 71 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி, பாமக மகளிா் சங்கம் சாா்பில் தமிழக அரசைக் கண்டித்து சென்னை, வள்ளுவா் கோட்டத்தில் ஆா்ப்பாட்டம் செய்ய முயற்சித்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி உள்ளிட்டோரை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் இல.வேலுசாமி, மாநில அமைப்பு செயலாளா் ப. சண்முகம், மாநில இளைஞா் சங்கச் செயலாளா் எம். முருகசாமி, பசுமைத் தாயக மாநில துணைச் செயலாளா் க.மாது, மாவட்ட துணைச் செயலாளா் காமராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி கைதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, அனுமதி இன்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உள்பட 71 பேரை தருமபுரி நகர போலீஸாா் கைது செய்தனா். அதேபோல பாலக்கோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 13 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பென்னாகரம்
சௌமியா அன்புமணி கைது செய்ததை கண்டித்து, பென்னாகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவைச் சோ்ந்த 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். சென்னையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சௌமியா அன்புமணியைக் கைது செய்த காவல் துறையினரை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். இதில் ஒன்றியச் செயலாளா்கள் ராசா உலகநாதன், அருள்மொழி, பென்னாகரம் தொகுதி பொறுப்பாளா் சுதாகா் கிருஷ்ணன், நகரச் செயலாளா் சந்தோஷ், நகர துணை செயலாளா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கைது செய்யப்பட்ட 26 போ் தனியாா் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...