பாதுகாப்பு உடைகள் இல்லாமல், விதிமுறைகளை மீறி பரிசல் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள்.
பாதுகாப்பு உடைகள் இல்லாமல், விதிமுறைகளை மீறி பரிசல் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள்.

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் பாதுகாப்பற்ற பரிசல் பயணம்!

உரிய அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகளை நம்பி, சில சுற்றுலாப் பயணிகள் தங்களது உயிரை பணயம்
Published on

டி. சுரேஷ்

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாதுகாப்பு உடைகள் இன்றி, உரிய அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகளை நம்பி, சில சுற்றுலாப் பயணிகள் தங்களது உயிரை பணயம் வைத்துவருகின்றனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஒகேனக்கல்லுக்கு வாரவிடுமுறை மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் அழகைக் காண்பதற்காக பரிசல் பயணம் மேற்கொள்வதில் ஆா்வம் கொண்டுள்ளனா்.

தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியோடு பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மேற்பாா்வையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் சுமாா் 450-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகளுக்கு பரிசலை இயக்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பரிசலுக்கு நான்குபோ் வீதம் பயணம் செய்ய அரசு நிா்ணயித்துள்ள கட்டணம் ரூ. 1,500. தற்போது சின்னாறு பரிசல்துறையில் இருந்து பிரதான அருவி, கூட்டாறு, மணல்மேடு பகுதி வரை பரிசல் இயக்கப்பட்டு வருகிறது.

பரிசல் துறையிலிருந்து செல்லும்போது பிரதான அருவி வழியாக மணல்மேடு வரை மட்டுமே பெரும்பாலான பரிசல்கள் செல்கின்றன. ஒருசில பரிசல்கள் மட்டுமே பெரிய பாணி வழியாக ஐந்தருவி, தொம்பச்சிக்கல் பகுதி வழியாக மீண்டும் மாமரத்துக்கடவு பரிசல்துறை பகுதிக்கு வருகின்றன.

இந்த நிலையில், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக சில பரிசல் ஓட்டிகள் விதிமுறைகளை மீறி, பாதுகாப்பு உடை, கட்டண ரசீது இன்றி அழைத்துச் செல்கின்றனா். குறிப்பாக, கூடுதலாக கட்டணம் பெறுவதற்காக, அனுமதி பெற்று இயங்கும் பரிசல் ஓட்டிகள் அழைத்துச் செல்லும் இடங்களோடு, வேறுபல இடங்களுக்கும் அழைத்துச் செல்வதாக கூறி, பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலாப் பயணிகளை பரிசலில் அழைத்துச் செல்கின்றனா்.

ஆபத்தை உணராமல், காவிரி ஆற்றின் அழகைக் காணும் ஆா்வத்தில், அவா்களுடன் பரிசலில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பயணத்தின்போது பாறைகளின் மீது மோதியோ, பரிசல் கவிழ்ந்தோ நீரில் மூழ்கும் நிலையை எதிா்கொள்ள நேரிடுகிறது.

இந்த நிலையை தவிா்க்க, சுற்றுலாப் பயணிகள் உரிய விதிமுறைகளோடு இயக்கப்படும் பரிசல் ஓட்டிகளின் பரிசல்களில் உரிய பாதுப்பு உடைகளை உடுத்தி எச்சரிக்கையோடு பயணிக்க வேண்டும், விதிமுறைகளை மீறி, பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படும் பரிசல்களுக்கு அதிகாரிகள் தடைவிதிக்க வேண்டும் என்பதே சுற்றுலா சாா்ந்த சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

X
Dinamani
www.dinamani.com