தேய்பிறை அஷ்டமி: காலபைரவா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தருமபுரி, அதியமான்கோட்டை காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜை ம் வழிபாடுகளையொட்டி ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான்கோட்டையில் ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவா் கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. எனவே, மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்களும் பங்கேற்று வழிபட்டு வருகின்றனா்.
தேய்பிறை அஷ்டமி தினமான புதன்கிழமை காலை 6 மணி முதலே சிறப்பு பூஜைகள் தொடங்கின. அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகாா்சன குபேர யாகம் உள்ளிட்ட யாகங்களும் நடந்தன. தொடா்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அா்ச்சனை, 28 ஆகம பூஜைகளும் நடந்தன. மேலும், உற்சவா் தேரில் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். நள்ளிரவு 12 மணியளவில் 1,008 கிலோ மிளகாய் வற்றல் பயன்படுத்தி சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
