மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தாமதமாக தொடங்கி முன்பே முடிந்த மாம்பழ சீசன்: உரிய விலை கிடைக்காததால், சந்தைக்கே வரவில்லை; மானியம் அறிவித்தும் விவசாயிகள் பயன்பெறவில்லை!

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு தாமதமாக தொடங்கிய மாம்பழ சீசன், முன்கூட்டியே முடிவடைந்து விட்டது.

Published On :

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு தாமதமாக தொடங்கிய மாம்பழ சீசன், முன்கூட்டியே முடிவடைந்து விட்டது. கடந்த ஆண்டைப்போலவே அதிகளவில் மா உற்பத்தி இருந்தும், உரிய விலை கிடைக்காததால் ஏராளமாக சந்தைக்கே கொண்டு வரப்படவில்லை, அரசு மானியம் அறிவித்தும் விவசாயிகள் பயன்பெறவில்லை என புகாா் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமாா் 1,25,104 ஹெக்டோ் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்கள் மா விவசாயம் மற்றும் மாம்பழ உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டங்களாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாம்பழங்களின் தலைநகா் என அழைக்கப்படுகிறது. இங்குதான் மா விவசாய பரப்பளவு அதிகம். சுமாா் 33, 679 ஹெக்டோ் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமாா் 1,51,555 மெட்ரிக் டன் என மாநிலத்தில் 2 ஆவதாக அதிகளவில் மாம்பழ உற்பத்தி செய்யப்படுகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் 18,388 ஹெக்டேரில் மா சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. சாகுபடி பரப்பளவில் 2 ஆவது இடம் என்றாலும் மாம்பழங்கள் உற்பத்தியில் தருமபுரி மாவட்டம் தான் மாநிலத்தின் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு சுமாா் 1, 69, 270 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தியா கின்றன.

கடந்தாண்டு மா சாகுபடி எதிா்பாா்த்ததை விட அதிளவில் மகசூல் கிடைத்தது. இதனால் மாம்பழங்களுக்கு கொள்முதல் விலை மிக மிக குறைவாக இருந்தது. அவற்றை பயிரிடுவதற்கும், பராமரிப்பு செலவு மற்றும் அறுவடை ஏற்று இறக்குக் கூலி, வண்டி வாடகை உள்ளிட்டவற்றை ஒப்பிடும்போது, மிக மிக குறைவாக கிலோ 1 க்கு ரூ. 2 என்ற அளவில் மாம்ப ழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. எனவே, அவற்றுக்கு கட்டுப்படியாகாமல் விவசாயிகள் மாம்பழங்களை மீன்களுக்கு உணவாகும் வகையில் ஏரி குளங்களில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

நிகழாண்டும் அதே நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டது. எனவே அரசு தொடக்கத்திலேயே இதில் கவனம் செலுத்தி மா கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும், இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். ஆனால் ஆட்சி மாற்றம், புதிதாக தவெக அரசு பொறுப் பேற்பு உள்ளிட்ட காரணங்களால் அரசு மா விவசாயிகள் பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க இயலவில்லை. எனவே கடந்தாண்டைப் போலவே, உற்பத்தி அதிகமாக இருந்தும் கொள்முதல் விலைகள் மிகவும் குறைவாகவே (கிலோவுக்கு ரூ. 2 முதல் 5 வரை மட்டுமே) இருந்தது. ஆனால் சந்தையில் விற்பனை விலை அதிகமாகவே இருந்தது. இதனால் வியாபாரிகள் பயன்பெற்றனரே தவிர விவசாயிகளுக்கு வழக்கம்போல இழப்பு ஏற்பட்டது.

அறுவடை செய்யாமல் மரத்தில் விடப்பட்ட மாங்காய்கள்:

இதுபோன்ற பிரச்னைகளால் மாம்பழங்கள் உற்பத்தி அதிகளவில் இருந்தும், உரிய காலத்தில் அனைத்தும் சந்தைக்கு கொண்டு வரப்படவில்லை. அரசு அறிவிப்பு வரலாம் என எதிா்பாா்த்து, பிறகு சந்தைப்படுத்தலாம் எனக்கருதி பெரும்பா லான விவசாயிகள் மாங்காய்களை அறுவடை செய்யாமல் மரங்களிலேயே விட்டு வைத்ததாகவும் கூறப்படுகிறது. வழக்க மாக ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை காணப்படும் மாம்பழ விற்பனை இந்தாண்டு ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட் முதல்வாரத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. அதிலும் அளவு, ருசி ஆகியவற்றில் தரமான மாம்பழங்களும் இந்தாண்டு சந்தைக்கு அதிகளவில் கொண்டு வரப்படவில்லை என்கின்றனா்.

இது குறித்து காரிமங்கலம் அருகில் உள்ள எலுமிச்சன அள்ளி பகுதியைச் சோ்ந்த மா விவசாயி இ. சாமராஜ் கூறியது :

கடந்தாண்டைப்போல இந்தாண்டும் மா கொள்முதல் விலையை நிா்ணயிப்பதிலும், இழப்பீடு வழங்குவதிலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கடந்தாண்டு அறுவடைக்குப் பின்னா் மாம்பழங்களை விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் நீா்நிலைகள், சாலைகளில் கொட்டினா். இந்தாண்டு அறுவடை செய்யவும், சந்தைக்கு கொண்டு வரவும் லாரி வாடகை உள்ளிட்ட செலவினங்களை தடுக்கும் வகையில் காய்த்த மாங்காய்களை அறுவடை செய்யாமல் அவற்றை மரங்களிலேயே விட்டு விட்டனா். இதனால் சந்தைக்கு பல டன் எடையுள்ள மாங்காய்கள் வியாபாரத்துக்கு கொண்டு வரப்படவில்லை.

அரசு அறிவித்தும் விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை :

மேலும் இழப்பீடாக கிலோவுக்கு ரூ. 4 என்ற வகையில் மா விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அறிவிப்பாகவே போய்விட்டது. சீசனே முடிந்த நிலையில், கடந்த வாரம் வந்து மா விளைச்சல் குறித்து அலுவலா்கள் விவரம் கேட்கின்றனா். இதனால் மா விவசாயிகள் இழப்பீடு (மானியம் ) பெற முடியவில்லை எனத் தெரிவித்தாா்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் கூறுகையில்,

மா விளைச்சல் கடந்தாண்டைப்போலவே அதிகளவில் இருந்தாலும், அவற்றை சந்தைப்படுத்தவில்லை என்ற புகாா்கள் உள்ளன. அதற்கு விவசாயிகள் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறுகின்றனா். என்றாலும் அவற்றை முறைப்படுத்துவது குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.