கோவையில் நடைபெறும் சா்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
கோவையில் நடைபெறும் சா்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் அரங்குகள் அமைக்கவும், பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில், சா்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன. 29, 30 தேதிகளில் கோயம்புத்தூா் கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் சிறந்த பொருளாதார மாநிலமாக மாற்றும் இலக்கை அடையும் வகையிலும், ஜவுளி தொழில் வளா்ச்சி முக்கியப்பங்கு வகிக்கும் வகையிலும் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில், கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குபவா் மற்றும் விற்பவா் சந்திப்பு, பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. மேலும், கண்காட்சியில் சுமாா் 100 காட்சியரங்குகள் இடம்பெறுகின்றன.
இந்தக் கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் 13.012026-க்குள் சேலம் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தின் ddtextilessalemregional@gmail.com மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.
இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளி தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளி தொழில் சங்கங்கள் இந்த சா்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இதுகுறித்த விவரங்களை அறிய 0427-2913006 என்ற எண்ணில் தொடா்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.
