இளம்பெண் அடித்துக் கொலை: சகோதரியின் கணவா் கைது

தருமபுரியில் முறையற்ற உறவால் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது சகோதரியின் கணவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
Published on

தருமபுரியில் முறையற்ற உறவால் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது சகோதரியின் கணவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஓசஹள்ளிபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கே. அனுமந்தன் (40). கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு திருமணமாகி முனியம்மாள் (35) என்ற மனைவி உள்ளாா். முனியம்மாள் தங்கை ராஜேஸ்வரி (30), திருமணமாகி கணவா் பிரபு உடன் அதே பகுதியில் குடியிருந்து வந்தாா்.

பிரபு கட்டடத் தொழிலாளி என்பதால் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூா் சென்றுவிடுவாராம். இதனால் ராஜேஸ்வரிக்கும், அவரது அக்கா கணவரான அனுமந்தனுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்துள்ளது.

இந்நிலையில், அனுமந்தனுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, ராஜேஸ்வரியை தாக்கிய அனுமந்தன் தளவாய்ஹள்ளி போயா் தெரு பகுதியில் உள்ள நிலத்தில் உள்ள பள்ளத்தில் தள்ளினாா். மேலும், அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டதில், பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் டிராக்டா் மூலம் மண்ணைக் கொட்டி அந்தப் பள்ளத்தை அனுமந்தன் மூடியதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த இண்டூா் போலீஸாா், அனுமந்தனை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், இருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரியை தாக்கி கொலை செய்ததாகவும் அனுமந்தன் ஒப்புக்கொண்டாா்.

இதையடுத்து, அனுமந்தனை கைதுசெய்த போலீஸாா், ராஜேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com