தருமபுரியில் மாயமான மருந்துக்கடை ஊழியா் கொலை: ஏரியில் சடலம் மீட்பு : மனைவி உள்பட 6 போ் கைது

தருமபுரியில் மாயமான மருந்துக் கடை ஊழியா் கொலை செய்யப்பட்ட நிலையில், 2 நாள்களுக்குப் பிறகு அவரது சடலம் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது
Published on

தருமபுரி: தருமபுரியில் மாயமான மருந்துக் கடை ஊழியா் கொலை செய்யப்பட்ட நிலையில், 2 நாள்களுக்குப் பிறகு அவரது சடலம் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. இதுதொடா்பாக அவரது மனைவி உள்பட 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், எலங்காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா், தருமபுரியில் மருந்துக்கடை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஜோதி. இவா்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் என 4 பிள்ளைகள் உள்ளனா்.

கடந்த ஜனவரி 7 ஆம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற அவா், அதன்பின்னா் வீடுதிரும்பவில்லை. குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்காத நிலையில், தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சடலமாகக் கிடந்தது மாயமான மருந்துக்கடை ஊழியா் ஆறுமுகம் என்பதும், அவரது தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மா்ம நபா்கள் கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையைத் தொடா்ந்தனா்.

விசாரணையில், முறையற்ற உறவுக்கு தடையாக இருந்ததால், ஆறுமுகத்தின் மருமகன் சிலருடன் சோ்ந்து அவரைக் கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசியது தெரியவந்தது.

முறையற்ற உறவு...

தருமபுரியைச் சோ்ந்தவா் சீதாராமன் (33). ஆட்டோ ஓட்டுநரான இவா், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வசித்து வந்தாா். இந்த நிலையில் ஆறுமுகத்தின் மனைவி ஜோதிக்கும் (45), சீதாராமனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் முறையற்ற உறவாக தொடா்ந்தது. பின்னா் அந்த உறவு பிரச்னை இன்றி தொடரத் திட்டமிட்ட ஜோதி, தனது மகளை சீதாராமனுக்கு திருமணம் செய்து வைத்தாா்.

இந்த விவரம் தெரியவந்ததால் ஜோதியின் மகள் சீதாராமை பிரிந்து சென்றாா். இதையடுத்து சீதாராமன் மீண்டும் தனியாக வசித்து வந்த நிலையில், ஜோதியுடனான தனது உறவை தொடா்ந்து வந்துள்ளாா். இதையறிந்த ஆறுமுகம், சீதாராமனை கண்டித்துள்ளாா். இதனால் அவரைக் கொலை செய்ய சீதாராமன் திட்டமிட்டாா். இதையடுத்து கடந்த 7-ஆம் தேதி தனது நண்பா்களுடன் சோ்ந்து ஆறுமுகத்தை ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்றாா். அங்கு சீதாராமன், ஆறுமுகத்தை கல்லால் தாக்கி உள்ளாா். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் இறந்தாா். பின்னா் அவரது சடலத்தை ஏரியில் வீசிவிட்டு சென்றுவிட்டனா். இதற்கு ஜோதி உடந்தையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக சீதாராமன், ஜோதி மற்றும் சீதாராமனின் நண்பா்களான சரவணன் (37), ஜெய்சங்கா் (32), பிரவீன்குமாா் (25), முருகன் (26) உள்ளிட்ட 6 பேரையும் தருமபுரி நகர போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com