தருமபுரியில் மாயமான மருந்துக்கடை ஊழியா் வெட்டிக்கொலை

தருமபுரியில் மாயமான மருந்துக்கடை ஊழியா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், 2 நாள்களுக்குப் பிறகு
Published on

தருமபுரி: தருமபுரியில் மாயமான மருந்துக்கடை ஊழியா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், 2 நாள்களுக்குப் பிறகு ஏரியிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக அவரது மருமகன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், எலங்காட்டு கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா், தருமபுரியில் மருந்துக் கடை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் என 4 பிள்ளைகளும் உள்ளனா். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற அவா் வீடுதிரும்பவில்லை. குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், சடலமாகக் கிடந்தது மாயமான மருந்துக் கடை ஊழியா் ஆறுமுகம் என்பதும், அவரது தலை மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மா்மநபா்கள் கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையைத் தொடா்ந்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில், முறையற்ற உறவுக்கு தடையாக இருந்ததால், ஆறுமுகத்தின் மருமகன் சிலருடன் சோ்ந்து ஆறுமுகத்தை கொலை செய்து சடலத்தை ஏரியில் வீசியது தெரியவந்தது. ஆறுமுகத்தின் மகள் ஒருவரை ஒசூரைச் சோ்ந்த இளைஞருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனா். அந்த இளைஞா் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோன நிலையில், மாமியாா் ஜோதிக்கும், அவருக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவரம் தெரியவந்த நிலையில், ஆறுமுகம் மனைவியைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருமகன், தனது மாமனாா் ஆறுமுகத்தை சிலருடன் சோ்ந்து கடத்திக் கொலை செய்து, ஏரியில் சடலத்தை வீசிச்சென்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து மருமகன் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com