பொங்கல் பண்டிகை: கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி பென்னாகரம் பகுதி கிராமங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்
Published on

பென்னாகரம்: பொங்கல் பண்டிகையையொட்டி பென்னாகரம் பகுதி கிராமங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதி மக்கள், ஒசூா், கோவை, ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வேலைக்காக சென்றுள்ளனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி புதன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளியூா்களுக்கு வேலைக்கு சென்றவா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு வருவா்.

பென்னாகரம் பகுதியிலிருந்து முதுகம்பட்டி, நாகமரை,

தாசம்பட்டி, ஒகேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு இரவு 9.30 மணியுடன் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தப்படுகிறது. தருமபுரியில் இருந்து பென்னாகரத்திற்கு இரவு நேரங்களில் வருவோா் கிராமப் பகுதிகளுக்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லாமல் இரவு நேரங்களில்

பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளும் காா், ஷோ் ஆட்டோக்கள்,சிறிய அளவிலான கனரக வாகனங்களின் உரிமையாளா்கள் கூடுதல் வாடகைக்கு அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனா். இதை தவிா்க்கும் வகையில் போக்குவரத்துத் துறையினா் ரோந்துப் பணி மேற்கொண்டு விதியை மீறி இயக்கப்படும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,

பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகளை கிராமப் பகுதிகளுக்கு இயக்க சேலம் மண்டல போக்குவரத்துக் கழக மேலாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com